YouVersion Logo
Search Icon

தீத்து 1

1
1இறைவனால் தெரிவுசெய்யப்பட்டவர்களின் விசுவாசத்திற்காகவும், இறைபக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறிவுக்காகவும், 2பொய் பேசாத இறைவன், காலம் தொடங்கும் முன்னரே வாக்குறுதி அளித்திருந்த நித்திய வாழ்வை எதிர்பார்த்திருக்கும் நம்பிக்கையினாலும் இறைவனின் அடிமையும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுலாகிய நான் எழுதுவது: 3நமது இரட்சகராகிய இறைவனின் கட்டளையால், என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பகிரங்க அறிவித்தலினால் அவர் தன்னுடைய செய்தியை ஏற்ற காலத்தில் வெளிப்படுத்தினார்.
4பவுலாகிய நான், எமது பொதுவான விசுவாசத்தில்#1:4 விசுவாசத்தில் இறைவன்மீது கொண்டுள்ள விசுவாசத்தில் எனக்கு உண்மை மகனாய்#1:4 மகனாய் சொந்த மகனைப் போல என்பது இதன் அர்த்தம். இருக்கின்ற தீத்துவுக்கு எழுதுகின்றதாவது:
பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
தீத்துவின் வேலை
5முற்றுப் பெறாத வேலைகளைச் சரிசெய்யவும், நான் உனக்கு அறிவுறுத்தியதற்கு அமைய அனைத்து நகரங்களிலும் மூப்பர்களை நியமிப்பதற்காகவுமே நான் உன்னைக் கிரேத்தா தீவில் விட்டுவந்தேன். 6அவ்வாறு, மூப்பராக நியமிக்கப்படுகின்றவர் குற்றம் சுமத்தப்படாதவராகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும்.#1:6 தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவனாக இருக்கவேண்டும் என்றும் மொழிபெயர்க்கலாம். அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், சீர்கேடானவர்கள் அல்லது அடிபணியாதவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உட்படாதவர்களாகவும் இருக்கவேண்டும். 7ஏனெனில் திருச்சபையைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ளவர், இறைவனின் பணி ஒப்படைக்கப்பட்ட ஒரு ஊழியர் என்பதால், அவர் குற்றம் சுமத்தப்படாதவராக இருக்கவேண்டும். அவர் தனது விருப்பத்தின்படி நடந்து கொள்கின்றவராகவோ, முற்கோபக்காரராகவோ, மதுபோதை கொண்டவராகவோ, மற்றவர்களைத் தாக்குகின்றவராகவோ, பொருளாசை கொண்டவராகவோ இருக்கக் கூடாது. 8அதற்கு மாறாக அவர் உபசரிக்கின்ற குணமுள்ளவராகவும், நன்மையை விரும்புகின்றவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், நீதிமானாகவும், பரிசுத்தமானவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருக்கவேண்டும். 9நம்பத்தகுந்த செய்தியை தனக்குப் போதிக்கப்பட்டபடியே உறுதியுடன் நம்பிப் பற்றிக்கொண்டிருப்பவராகவும் அவர் இருக்கவேண்டும். அப்பொழுதே நலமான போதனையினால் அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்தவும், அதற்கு முரணாக இருப்பவர்களை மறுத்து சரியானதை எடுத்துச் சொல்லவும் முடியும்.
நன்மை செய்யத் தவறியவர்களை கண்டித்தல்
10ஏனெனில், அநேகர் அடிபணியாதவர்களாகவும், வீண்பேச்சுப் பேசுகின்றவர்களாகவும், ஏமாற்றுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். குறிப்பாக அவ்வாறானவர்கள் விருத்தசேதன குழுவில் இருக்கின்றார்கள். 11அவ்வாறானவர்களுடைய வாயை அடக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பொருளாசைக்காக போதிக்கக் கூடாதவற்றைப் போதித்து, முழுக் குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள். 12அவர்களில் ஒரு இறைவாக்கினன், “கிரேத்தர்கள்#1:12 கிரேத்தர்கள் என்பது கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பொய் பேசுகின்றவர்கள், அவர்கள் கொடிய மிருகங்கள், சோம்பேறிகளான உணவுப் பிரியர்” என்று கூறியிருக்கிறான். 13இந்தக் கூற்று உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டேயிரு. அப்போது அவர்கள் விசுவாசத்தில் உறுதியடைந்து, 14யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகின்ற மனிதர்களின் கட்டளைகளுக்கும் தங்கள் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள். 15தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் களங்கப்பட்டவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய மனங்களும், மனசாட்சிகளும் களங்கப்பட்டிருக்கின்றன. 16இறைவனைத் தாங்கள் அறிந்திருப்பதாக அவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினால் இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதி அற்றவர்கள்.

Currently Selected:

தீத்து 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in