YouVersion Logo
Search Icon

ரூத் 1

1
தன் கணவனையும், மகன்மாரையும் இழந்த நகோமி
1இஸ்ரயேல் நாட்டில் நியாயாதிபதிகள் ஆளுகை செய்த காலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அப்போது யூதா மாகாணத்திலுள்ள பெத்லெகேம் பட்டணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், தன் மனைவியுடனும் தன் இரு மகன்மாருடனும் சிறிது காலம் மோவாப் நாட்டில் வாழ்வதற்காக அங்கு சென்றான். 2அந்த மனிதனின் பெயர் எலிமெலேக். அவன் மனைவியின் பெயர் நகோமி. அவனது இரு மகன்மாரின் பெயர்கள் மக்லோன், கிலியோன். யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் நாட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கி விட்டனர்.
3அங்கே நகோமியின் கணவன், எலிமெலேக் மரணித்தான், அதனால் நகோமியும் அவளது இரு மகன்மாரும் தனித்து விடப்பட்டார்கள். 4சில காலத்தின் பின்பு, நகோமியின் மகன்மார் அங்கே மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளின் பெயர் ரூத். அவர்கள் அங்கே சுமார் பத்து வருடங்கள் வாழ்ந்த பின்னர், 5மக்லோன், கிலியோன் ஆகிய இருவரும் மரணித்தார்கள். இப்படியாக நகோமி தன் கணவனையும் தன் மகன்மார் இருவரையும் இழந்து தனித்து விடப்பட்டாள்.
நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்குத் திரும்புதல்
6நகோமி மோவாப் நாட்டில் வாழ்ந்துவந்த நாட்களில், கர்த்தர் தம்முடைய மக்களின்மீது தயவு காண்பித்து, அவர்களுக்கு உணவளித்து#1:6 உணவளித்து – நல்ல விளைச்சளை கொடுத்திருக்கிறார். உதவி செய்கின்றார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் இரண்டு மருமகள்மாருடன் அங்கிருந்து தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு ஆயத்தமானாள். 7எனவே அவள் தனது மருமகள்மாருடன் வசித்து வந்த அந்த நாட்டைவிட்டு, யூதா நாட்டுக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டாள்.
8அப்போது நகோமி தன் இரு மருமகள்மாரிடமும், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். மரணித்த உங்கள் கணவன்மாருக்கும், எனக்கும் நீங்கள் இரக்கம் காண்பித்தது போன்று கர்த்தர் உங்களுக்கும் இரக்கம் காண்பிப்பாராக. 9உங்களுக்கு அமைய இருக்கும் கணவன் வீட்டில் நீங்கள் ஆறுதலாய் வாழ்ந்திருக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக” என்று சொன்னாள்.
அதன் பின்னர் நகோமி அவர்களை முத்தமிட்டபோது, மருமகள்மார் இருவரும் சத்தமிட்டு அழுது, 10“இல்லை! நாங்கள் உங்களோடு வருவோம், உங்கள் மக்களிடமே வருவோம்” என்று சொன்னார்கள்.
11நகோமியோ அவர்களிடம், “என் மகள்மாரே. நீங்கள் திரும்பிப் போங்கள்; நீங்கள் ஏன் என்னோடு வரவேண்டும்? உங்களுக்குக் கணவன்மாராகும்படி, இனிமேல் என் கருப்பையில் எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? 12என் மகள்மாரே; நீங்கள் உங்கள் வீட்டுக்கே திரும்பிச் சென்று விடுங்கள். எனக்கோ வயது போய்விட்டது, இன்னொருவனைக் கணவனாக அடையவும் முடியாது. அவ்வாறே இனிமேலும் எனக்குப் பிள்ளைகள் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடு, இன்றிரவே நான் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு மகன்மாரைப் பெற்றாலும், 13அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்வரை நீங்கள் காத்திருக்க முடியுமோ? அதுவரை திருமணம் செய்யாது தனித்திருக்கத்தான் முடியுமோ? என் மகள்மாரே வேண்டாம்! கர்த்தரின் கை எனக்கு எதிராக இருக்கின்றது. எனவே என் பொருட்டு உங்களுக்கு நேரிட்டதானது எனக்கு இன்னும் அதிக துக்கத்தை ஏற்படுத்துகின்றது” என்றாள்.
14அப்போது அவர்கள் மீண்டும் சத்தமிட்டு அழுதார்கள். ஒர்பாளோ தன் மாமியை முத்தமிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுச் திருப்பிச் சென்றாள், ஆனால் ரூத்தோ அவளைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள்.
15அப்போது நகோமி ரூத்தை நோக்கி, “இதோ பார், உன் மைத்துனனின் மனைவி தன் மக்களிடத்துக்கும், தன் தெய்வங்களிடத்துக்கும் திரும்பிப் போகின்றாள். அவளுக்குப் பின்னால் நீயும் உன் வீட்டுக்கு திரும்பிப் போ” என்றாள்.
16ஆனால் ரூத் அவளிடம், “உங்களைவிட்டுப் பிரிந்து போகவோ அல்லது திரும்பிச் செல்லவோ, நீங்கள் என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்துக்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உங்களுடைய மக்கள் என்னுடைய மக்களாயிருப்பார்கள். உங்களுடைய இறைவன் என்னுடைய இறைவனாயிருப்பார். 17நீங்கள் மரணிக்கும் இடத்தில் நானும் மரணிப்பேன், அந்த இடத்திலேயே நானும் அடக்கம் செய்யப்பட வேண்டும். மரணம் மட்டுமே என்னையும் உங்களையும் பிரிக்க இயலும். அதைவிட வேறு ஏதாவது காரணத்தால் நாம் பிரிந்து செல்ல நேரிட்டால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குத் தண்டனை தரட்டும்” என்றாள். 18ரூத் தன்னுடன் வருவதற்கு மனவுறுதியாய் இருப்பதைக் கண்ட நகோமி, அதற்குப் பின்னரும் அவளை வற்புறுத்தவில்லை.
19எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம் வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, பட்டணத்து மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து பரபரப்படைந்தார்கள். அங்கிருந்த பெண்கள் வியப்புடன், “நகோமியா இவள்?” என ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
20அப்போது அவள் அவர்களை நோக்கி, “நீங்கள் என்னை நகோமி#1:20 நகோமி இன்பம் என்று பொருள்., என்று அழைக்க வேண்டாம். என்னை மாரா#1:20 மாரா கசப்பு என்று பொருள். என்றழையுங்கள். ஏனெனில் சர்வ வல்லமை கொண்டவர், என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார். 21நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் கர்த்தரோ என்னை வெறுமையாய் திரும்பி வரச் செய்தார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்க வேண்டும்? கர்த்தர் என்னைத் துன்புறுத்தி, சர்வ வல்லமை கொண்டிருக்கும் அவர், என்மீது துன்பத்தைச் சுமத்தியுள்ளார்” என்றாள்.
22இவ்வாறு நகோமி தன் மருமகளான மோவாபிய பெண் ரூத்துடன் மோவாபிலிருந்து பெத்லெகேமுக்குத் திரும்பி வந்தாள். அப்போது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.

Currently Selected:

ரூத் 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in