YouVersion Logo
Search Icon

ரோமர் 1

1
1கிறிஸ்து இயேசுவின் அடிமையும் அப்போஸ்தலராக இறைவனால் அழைக்கப்பட்டு, இறைவனின் நற்செய்தியை அறிவிப்பதற்கென்று வேறுபிரித்தெடுக்கப்பட்டவனுமான பவுலாகிய நான் எழுதுவதாவது: 2இறைவன், தமது நற்செய்தியை தமது இறைவாக்கினர் ஊடாக பரிசுத்த வேதவசனங்களில் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார். 3இந்நற்செய்தி இறைவனுடைய மகனைப் பற்றியது; இவரே சரீரத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், 4மரணித்தோரிலிருந்து பரிசுத்தத்தின் ஆவியின்படி ஏற்பட்ட அவரது உயிர்த்தெழுதலினாலே, வல்லமை கொண்ட இறைவனின் மகன் என்று பிரகடனப்படுத்தப்பட்டவரும் ஆவார்; இவரே நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 5அவரின் பேரில் அவருக்கூடாக யூதரல்லாத அனைத்து இனத்தவர்களையும் விசுவாசத்தினால் வரும் கீழ்ப்படிவான வாழ்வுக்கு அழைப்பதற்கான கிருபையையும், அப்போஸ்தல ஊழியத்தையும் நாம் பெற்றுள்ளோம். 6யூதரல்லாதோர் என்பதில்#1:6 யூதரல்லாதோர் என்பதில் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமாகும்படி அழைக்கப்பட்ட நீங்களும் அடங்கி உள்ளீர்கள்.
7இறைவனால் அன்பு செலுத்தப்பட்டு பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டுள்ள ரோம் நகரில் இருக்கின்ற, உங்கள் அனைவருக்கும் நான் எழுதுவதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
ரோமுக்குப் போவதற்கான பவுலின் ஆவல்
8முதலாவதாக, உங்கள் விசுவாசத்தைக் குறித்து உலகம் எங்கும் பிரசித்தமாக பேசப்படுவதன் காரணமாக, உங்கள் எல்லோருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாக என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 9ஏனெனில், இறைவனே எனக்கு சாட்சி; அந்த இறைவனது மகனின் நற்செய்திக்காகவே நான் எனது ஆவியால்#1:9 எனது ஆவியால் எனது சிந்தனை, உணர்வு, மனப்பான்மை, விருப்பு என அனைத்திலும் என்று பொருள் இறைவனுக்கு ஊழியம் செய்கின்றேன். ஆம், என் மன்றாடலில் நான் உங்களை இடைவிடாமல் நினைவுகூருகின்றேன் என்பதற்கு இறைவனே சாட்சியாக இருக்கின்றார். 10எப்போதும் என் ஜெபங்களில், எப்படியாவது இறைவனுடைய விருப்பத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி, இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று கெஞ்சிக் கேட்கின்றேன்.
11ஏனெனில் உங்களைப் பலப்படுத்துவதற்காக, ஆவிக்குரிய அன்பளிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு உங்களைக் காண நான் ஆவலாயிருக்கிறேன். 12அதாவது நீங்களும் நானும், ஒருவரது விசுவாசத்தால் மற்றொருவரை ஊக்குவிக்கலாம். 13பிரியமானவர்களே, நான் மற்றைய இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியத்தின் பலன்களைப் பெற்றது போலவே, உங்கள் மத்தியிலும் பலன்களைப் பெறும் பொருட்டு அங்கே வருவதற்குப் பலமுறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரை வர முடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை.
14கிரேக்கரோ, கிரேக்கர் அல்லாதவர்களோ, ஞானிகளோ, மூடர்களோ என்று பாராமல் அனைவருக்குமே#1:14 அனைவருக்குமே யூதரல்லாத மக்கள் எல்லோருக்கும் என்று பொருள். நான் கடமைப்பட்டவனாய் இருக்கின்றேன். 15அதனாலேயே ரோம் நகரில் இருக்கின்ற உங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாயிருக்கிறேன்.
16ஏனெனில் நற்செய்தி குறித்து நான் வெட்கப்படவில்லை; அதுவே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்கின்ற இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. அந்த நற்செய்தி முதலாவதாக யூதருக்கும், அதன் பின்னர் கிரேக்கருக்கும் இவ்வாறிருக்கின்றது. 17“நீதிமான் விசுவாசத்தினாலே வாழ்வார்”#1:17 ஆப. 2:4 என்று எழுதப்பட்டிருக்கின்றபடி, ஆரம்பம் முதல் இறுதிவரை விசுவாசத்தினாலே#1:17 விசுவாசத்தினாலே – கிரேக்க மொழியில், விசுவாசத்தினால் விசுவாசத்துக்கென்று என்றுள்ளது. வருகின்ற இறைவனின் நீதியானது இந்த நற்செய்தியில் வெளிப்படுத்தப்படுகிறது.
பாவத்துக்கு எதிரான இறைவனின் தண்டனை
18அவ்வாறே, மனிதர்கள் தங்களுடைய அநீதியான செயல்களால் சத்தியத்தை அடக்கி வைப்பதால், இறைவனை மறுதலிக்கும் அவர்களுடைய நடத்தைக்கும் அநீதியான செயல்களுக்கும் எதிராக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபமும் வெளிப்படுத்தப்படுகிறது. 19ஏனெனில் இறைவனைப்பற்றி அவர்கள் அறியக் கூடியவற்றை இறைவனே அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால், அவை அவர்களுக்குத் தெளிவாக இருக்கின்றன; 20உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே இறைவனுக்குரியதான, கண்ணுக்குப் புலப்படாத தன்மைகளான அவருடைய நித்திய வல்லமையும், இறை இயல்பும் படைக்கப்பட்டவற்றின் மூலம் புரிந்துகொள்ளப்பட்டு, தெளிவாகக் காணப்படுகின்றன. ஆகையால், மனிதர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்த வழியில்லை.
21அவர்கள் இறைவனை அறிந்திருந்த போதிலும் அவரை இறைவன் என்று மகிமைப்படுத்தவோ, அவருக்கு நன்றி செலுத்தவோ இல்லை. மாறாக, அவர்களது சிந்தனை பயனற்றதாக மாறியது, அவர்களது மந்தமான இருதயம் இருளடைந்தது. 22அவர்கள் தங்களை அறிஞர்கள் என்று திடமாகச் சொல்லிக் கொண்டாலும் மூடர்களாகி, 23அழியாமையுடைய இறைவனின் மகிமையை, அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போலுள்ள உருவச்சிலைகளால் மாற்றீடு செய்தார்கள்.
24எனவே தங்கள் இருதயத்தின் ஆசை வெறிகளிலே ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும்படி, இறைவன் அவர்களை பாலியல் அசுத்தத்துக்குக் கையளித்தார். 25ஏனெனில், இறைவனைப்பற்றிய சத்தியத்துக்கு மாற்றீடாக அவர்கள் பொய்யினை ஏற்று, படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றைத் தொழுதுகொண்டார்கள். படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.
26இதனாலேயே, இறைவன் அவர்களை அவமானமான இச்சைகளுக்குக் கையளித்தார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள். 27அவ்விதமாகவே ஆண்களும் பெண்களுடனான இயல்பான பாலுறவைக் கைவிட்டு, ஆண்கள் மேல் ஆண்கள் வேட்கைகொண்டு, ஆண்களுடன் ஆண்கள் வெட்கக்கேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத் தம்மில் பெற்றுக்கொண்டார்கள்.
28மேலும், இறைவனைப்பற்றிய உண்மை அறிவு சீரானதென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளாததைப் போலவே, இறைவனும் செய்யத் தகாதவற்றைச் செய்கின்ற சீர்கெட்ட எண்ணத்தின் கட்டுப்பாட்டுக்குள் அவர்களைக் கையளித்துவிட்டார். 29அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும் தீமையினாலும் பேராசையினாலும் சீர்கேட்டினாலும் முற்றிலும் நிரம்பியவர்களாகி, பொறாமையினாலும் கொலையினாலும் சண்டையினாலும் வஞ்சனையினாலும் பகையினாலும் நிறைந்தவர்களானார்கள். 30அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவும், தூற்றுகின்றவர்களாகவும், இறைவனை வெறுக்கின்றவர்களாகவும், அவமரியாதை செய்கின்றவர்களாகவும், அகந்தை கொண்டவர்களாகவும், பெருமை பேசுகின்றவர்களாகவும், தீமை செய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், 31உணர்வில்லாதவர்களாகவும், உண்மை இல்லாதவர்களாகவும், அன்பில்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள். 32இவ்வாறானவற்றைச் செய்கின்றவர்கள், மரணத்துக்கே தாங்கள் தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தைப் புரிந்து கொண்டிருந்தாலும், இவற்றைத் தொடர்ந்து செய்வதுடன் இவற்றைச் செய்கின்றவர்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றார்கள்.

Currently Selected:

ரோமர் 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in