1
ஒபதியாவின் தரிசனம்
1ஒபதியாவின் தரிசனம்.
ஆண்டவராகிய கர்த்தர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்வது:
“எழுந்திடுவீர், ஏதோமுக்கு#1:1 ஏதோமுக்கு – எபிரேய மொழியில் அவளுக்கு எதிராக போர் தொடுக்கச் சென்றிடுவோம்!”
என அண்டை நாடுகளுக்கு அறிவிக்கும்படி
ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்,
என்ற செய்தியை கர்த்தர் சொல்லக் கேட்டோம்.
2“ஏதோமே,#1:2 ஏதோமே – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது இதோ! நான் உன்னை நாடுகளுக்குள் சிறியதாக்குவேன்,
நீ மிகத் துச்சமாகக் கருதப்படுவாய்.
3மலை உச்சிகளில் கோட்டையமைத்து, மலைப் பாறைப் பிளவுகளில் குடியிருப்பதனால்,
‘என்னை யாரால் தரையில் வீழ்த்த முடியும்?’ என உனக்கு நீயே சொல்லிக்கொள்பவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை ஏமாற்றி விட்டது!
4நீ கழுகைப் போல உயரப் பறந்தாலும்,
நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்,
அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே தள்ளிவீழ்த்துவேன்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
5திருடர்கள் உன்னிடம் வந்தால்,
இரவில் கொள்ளையர்கள் வந்தால்,
அவர்கள்கூட தங்களுக்குத் தேவையானதை மட்டுமே திருடுவார்கள்.
திராட்சைப்பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால்,
அவர்களும் சில பழங்களை விட்டுவைப்பார்கள் அன்றோ!
உனக்கோ என்ன ஒரு பேரழிவு!
6ஏசாவின் மக்களது#1:6 ஏசாவின் மக்களது – ஏதோமியர், ஈசாக்கின் மகனாகிய ஏசாவின் வழித்தோன்றல்கள். ஆதி. 36:9 உடைமைகள் அனைத்தும் சூறையாடப்படும்,
மறைத்து வைக்கப்பட்ட அவனது திரவியங்கள், தேடித்தேடி கொள்ளையிடப்படும்.
7உன்னோடு நட்புறவு உடன்படிக்கை செய்தோர்,
உன்னை உனது நாட்டின் எல்லைவரை தள்ளிவிடுவார்கள்.
உன்னுடன் சமாதானமாக இருந்தவர்கள்,
உன்னை ஏமாற்றி உன்னை வெற்றிகொள்வார்கள்.
உன்னோடு அப்பத்தை உட்கொண்டவர்களே,
உனக்கு கண்ணிப்பொறி வைப்பார்கள்.
ஆனால் நீயோ ஒன்றையும் அறியாதிருப்பாய்.
8“அந்தநாளிலே தாம் செய்யவிருப்பதை கர்த்தர் இவ்வாறு சொல்கின்றார்:
ஏதோமியரின் ஞானமுள்ள ஆட்களை நான் ஒழிக்காமல் இருப்பேனோ,
ஏசாவின் மலைகளில் உள்ள அறிவாளிகளை அழிக்காதிருப்பேனோ!”
9தேமான் பட்டணமே, உனது மாவீரர்கள் அன்று கதிகலங்கிப் போவார்கள்,
அதனால் ஏசாவின் மலைகளில் உள்ள வீரர்கள் அனைவரும்
வெட்டிக் கொன்றழிக்கப்படுவார்கள்.
ஏதோம் தண்டிக்கப்படக் காரணம்
10உன் உறவினரான#1:10 உறவினரான – எபிரேய மொழியில் சகோதரனாகிய யாக்கோபின் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறையின் காரணமாக,
அவமானம் உன்னை மூடும்.
நீ முற்றாக அழிக்கப்படுவாய்.
11அந்தநாளிலே, நீ பாராமுகமாய் ஒதுங்கி நின்றாய்.
ஆம், அந்நியர்கள் அவனது செல்வத்தை பறித்துச் சென்ற அந்தநாளிலே,
பிறநாட்டவர்கள் எருசலேமின் நகரவாயில்களினுள் புகுந்து,
நகரத்துக்காக சீட்டுக்குலுக்கிப் போட்டு அதனை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டபோது,
நீயும் அவர்களில் ஒருவனைப் போலவே நடந்துகொண்டாய்.
12உன் உறவினன் துன்பப்படுகின்ற அந்தநாளிலே,
நீ அதைப் பார்த்து பெருமிதம் அடையலாமா?
யூதாவின் மக்கள், அழிவைச் சந்திக்கின்ற அந்தநாளிலே
நீ அதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டாடலாமா?
அவர்களுக்கு பெரும் அனர்த்தம் ஏற்படும் அந்தநாளிலே,
நீ மார்தட்டிக் கொள்ளலாமா?
13என் மக்களுக்கு பேரிடர் ஏற்பட்ட அந்தநாளிலே,
என் மக்களது நகர வாசல்களுக்குள் நீயும் நுழையலாமா?
அவர்களுக்கு பேரிடர் ஏற்பட்ட நாளிலே,
நீ அவர்களது கேடு கண்டு பெருமிதம் அடையலாமா?
அவர்களுக்கு பேரிடர் ஏற்பட்ட நாளிலே,
நீ அவர்களது செல்வத்தைக் கைப்பற்றலாமா?
14உயிர்பிழைத்து ஓடிய யாக்கோபின் மக்களை,
பெருஞ்சாலையின் சந்திகளில் காத்திருந்து, நீ வெட்டிக் கொன்றழிக்கலாமா?
அவர்களுக்கு பெரும் அனர்த்தம் ஏற்படும் நாளிலே,
எஞ்சித் தப்பியவர்களை அவர்களது எதிரிகளிடம் நீ பிடித்துக் கொடுக்கலாமா?
கர்த்தரின் நாள் வரவிருக்கின்றது
15“ஏனெனில், அனைத்து நாட்டு மக்களுக்குமான கர்த்தரின் அந்தநாள்,#1:15 கர்த்தரின் அந்தநாள் – நியாயத்தீர்ப்பின் நாள்.
சமீபத்தில் வந்துவிட்டது.
நீ செய்ததே உனக்கும் செய்யப்படும்.
உனது செயலுக்கு உரிய பலன் உனது தலையில் வந்து விழும்.
16நீங்கள் என் பரிசுத்த மலையின்மீது அருந்தியவாறே
அனைத்து நாட்டினரும் தொடர்ந்து அருந்துவார்கள்.
அவர்கள் அருந்தி, நன்கு உறிஞ்சிக் குடித்து,
இருந்த அடையாளமே இல்லாமல் போவார்கள்.
17ஆனால் சீயோன் மலைமீதினிலே மீட்பு இருக்கும்,
அது பரிசுத்த இடமாயிருக்கும்.
யாக்கோபின் மக்கள், தம்மை ஆக்கிரமித்தோரிடமிருந்து
தமக்குரியதை மீண்டும் உரிமையாக்கிக் கொள்வார்கள்.
18யாக்கோபின் மக்கள் நெருப்பாக இருப்பார்கள்,
யோசேப்பின் சந்ததியினர் தீச்சுவாலையாக இருப்பார்கள்.
அவர்களால் எரித்து அழிக்கப்படும் உலர்ந்த தண்டுகளோ ஏசாவின் மக்கள்.
ஏசாவின் மக்களில் ஒருவரேனும் எஞ்சித் தப்புவதில்லை;”
கர்த்தர் இதை அறிவித்துவிட்டார்.#1:18 யாக்கோபின் மக்கள், யோசேப்பின் மக்கள் – இஸ்ரயேல், யூதா ஆகிய இரு இராச்சியங்களையும் சேர்ந்தவர்கள்.
19நெகேப்#1:19 நெகேப் – யூதேயாவின் தென்பகுதி பிரதேசத்தில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும்,
செபேலா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தியரின் நாட்டையும்
மீண்டும் உரிமையாக்கிக் கொள்வார்கள்;
அவர்கள் எப்பிராயீமிம் மற்றும் சமாரியா நாடுகளை
தமக்குரியதாக்குவார்கள்.
பென்யமீன் ஆட்கள் கீலேயாத் பிரதேசத்தை தமதாக்கிக் கொள்வார்கள்.
20நாடுகடத்தப்பட்ட பின்னர் கானான் பிரதேசத்துக்கு மீண்ட இஸ்ரயேல் மக்கள் படையினர்,
சாறிபாத் நகரம் வரையுள்ள பிரதேசத்தை
உரிமையாக்கிக் கொள்வார்கள்.
எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் சேப்பாராத்தில் இருந்து திரும்பியவர்கள்,
நெகேப் பிரதேசத்திலுள்ள பட்டணங்களை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
21ஏசாவின் மலையை ஆட்சி புரிவதற்காக
விடுதலை வீரர்கள் சீயோன் மலைமீது ஏறிச்செல்வார்கள்.
அப்போது இராச்சியம் கர்த்தருடையதாக இருக்கும்.