YouVersion Logo
Search Icon

நெகேமியா 1

1
நெகேமியாவின் மன்றாடல்
1அகலியாவின் மகன் நெகேமியாவின் வார்த்தைகள்:#1:1 வார்த்தைகள் அல்லது செயற்பாடுகள்.
அர்தசஷ்டா#1:1 அர்தசஷ்டா அல்லது பெர்சியாவின் பேரரசர். அரசாண்ட இருபதாம் வருடம், கிஸ்லேவ் மாதத்தில் நான் சூசான் எனப்பட்ட அரணிடப்பட்ட கோட்டையில் இருந்தேன்; அக்காலகட்டத்தில் நடந்தவை இவையே: 2அப்போது எனது சகோதரருள் ஒருவனான அனானி யூதாவிலிருந்து வேறு சில ஆட்களுடன் வந்தான்; நான் அவர்களிடம், நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பிப் பிழைத்து எஞ்சியிருக்கும் யூதரைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் விசாரித்தேன்.
3அவர்கள் என்னிடம், “பாபிலோனுக்கு#1:3 பாபிலோனுக்கு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது நாடுகடத்தப்பட்டு தப்பிப்பிழைத்தவர்களில், மீண்டும் யூதா#1:3 யூதா – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது மாகாணத்துக்கு திரும்பிச் சென்றவர்கள் மிகுந்த கஷ்டத்துடனும், அவமானத்துடனும் வாழ்கிறார்கள். எருசலேம் பட்டணத்தைச் சூழ்ந்திருந்த மதில் உடைக்கப்பட்டிருக்கிறது; அதன் வாசல் கதவுகளும் எரிக்கப்பட்டுள்ளன” என்றார்கள்.
4இவற்றைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுதேன். சில நாட்கள் நான் பரலோகத்தின் இறைவனுக்கு முன்பாகத் துயரத்துடன் உபவாசித்து மன்றாடினேன். 5பின்பு நான்,
“கர்த்தரே, பரலோகத்தின் இறைவனே, மகத்துவமுள்ளவரும் பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பாய் இருந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்களுடன் உமது நிலையான அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கின்றவரே! 6உமது அடியவனான நான் இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் உமது முன்னிலையில் செய்யும் என் மன்றாடுதலை செவிமடுத்துக் கேட்பீராக; கண்களைத் திறந்திடுவீராக. நானும் என் முற்பிதாக்களின் குடும்பமும் உட்பட, இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கை செய்கின்றேன். 7உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் தீயவர்களாக நடந்தோம். நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை.
8“நீர் உமது அடியவனான மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை நினைவில்கொள்வீராக. நீர் மோசேயிடம், ‘இஸ்ரயேல் மக்களே!#1:8 இஸ்ரயேல் மக்களே – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால் பிறநாட்டு மக்களுக்குள்ளே நான் உங்களைச் சிதறிப்போகச் செய்வேன். 9ஆனால் நீங்கள் மனந்திரும்பி என்னிடம் வந்து என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாடுகடத்தப்பட்டவர்கள் அடிவானத்தின் தொலைதூரத்தில் இருந்தாலும்கூட, நான் அவர்களை ஒன்றுகூட்டிச் சேர்த்து என்னுடைய பெயருக்கென இருப்பிடமாக நான் தெரிவுசெய்து கொண்ட இடத்துக்குக் கொண்டுவருவேன்’ என்றீரே.
10“அவர்கள் உம்முடைய அடியவர்களும் உமது மக்களும், உமது மிகுந்த வல்லமையினாலும் பலத்த கரத்தினாலும் நீர் மீட்டுக்கொண்டவர்களும் ஆவர். 11ஆண்டவரே, உமது அடியவனின் மன்றாடுதலையும், உமது பெயரில் பயபக்தியாய் இருப்பதில் மகிழ்ச்சியடையும் உமது அடியவர்களின் மன்றாடுதலையும் செவிமடுத்துக் கேட்டருள்வீராக; இந்த மனிதனின் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கச் செய்து இன்று எனக்கு வெற்றியைத் தந்தருள்வீராக!” என்று மன்றாடினேன்.
அந்நாட்களில் நான் பெர்சிய#1:11 பெர்சிய – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது அரசன் பருகுவதற்குரிய பானங்களை பரிமாறுகின்ற பதவி வகித்தேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in