1
1நினிவே பட்டணம் குறித்த இறைவெளிப்பாடு. எல்கோஷ் ஊரைச் சேர்ந்த நாகூம் கண்ணுற்ற தரிசனத்தின் தொகுப்பு.
எதிரிகளுக்கு எதிரான கர்த்தரின் கோபம்
2கர்த்தர், எரிச்சலுள்ள பழிவாங்கும் இறைவன்.
கர்த்தர் பழிவாங்குபவர், பற்றியெரியும் வெஞ்சினம் நிறைந்தவர்.
கர்த்தர் தமது எதிரிகளைப் பழிவாங்குபவர்.
பகைவர்மீது கொண்ட கடும் சினத்தை சேர்த்து வைப்பவர் அவர்.
3கர்த்தர் கோபம்கொள்வதில் தாமதிக்கிறவர், மிகுந்த வல்லமையுமுள்ளவர்;
எனவே எக்காரணம் கொண்டும் கர்த்தர் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
சுழல் காற்றும் புயல்காற்றும் அவர் செல்கின்ற பாதை,
மேகங்களோ அவருடைய பாதங்களின் கீழ் உள்ள தூசு.
4அவரது அதட்டலைக் கேட்டு கடல் வற்றிப் போகின்றது,
அனைத்து நதிகளையும் வற்றிப்போகச் செய்கின்றார் அவர்.
பாசானும் கர்மேலும் வாடி வதங்கிற்று,
லெபனோனின் மலைகளில் பூக்களும் வாடி உதிர்ந்தன.
5அவர் முன்னிலையில் மலைகளில் நடுக்கம் ஏற்பட்டு,
குன்றுகள் உருகிப் போகும்.
அவரது பிரசன்னத்தில் பூமி குமுறும்,
உலகம் குமுறும், அதன் குடிமக்கள் நடுங்குவார்கள்.
6அவருடைய கோபத் தண்டனையை தாங்கி நிற்கக் கூடியவன் யார்?
பற்றியெரியும் அவரது கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்?
அவருடைய வெஞ்சினம் நெருப்பைப் போல் கொட்டப்படுகின்றது;
அவருக்கு முன்பாக மலைப்பாறைகள் தூளாக்கப்படுகின்றன.
7கர்த்தர் நல்லவர்,
அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர்.
தம்மில் தஞ்சம் அடைந்தோரில் அவர் கரிசனை கொண்டுள்ளார்.
8ஆனாலும் அடக்கமுடியாத பெருவெள்ளத்தால்
எதிரிகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;
அவர் தமது எதிரிகளை மரண இருளுக்குள் துரத்துவார்.
9அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும்,
அவர் இறுதி அழிவொன்றைக் கொண்டுவருவார்;
ஆபத்துவேளை இரண்டாம் முறையும் வராது.
10அவர்கள் பின்னிப்பிணைந்த முட்செடிகளைப் போல்,
தங்கள் திராட்சைரசத்தினால் போதை கொண்டவர்கள் போல் இருப்பார்கள்.
அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்களைப் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.
11நினிவே பட்டணமே! கர்த்தருக்கு எதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கின்ற,
கொடுமையான ஆலோசகன் ஒருவன்
உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.
12தமது மக்களாகிய யூதாவுக்கு#1:12 தமது மக்களாகிய யூதாவுக்கு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கர்த்தர் சொல்வது இதுவே:
“அசீரியர்கள்#1:12 அசீரியர்கள் – எபிரேய மொழியில் அவர்கள் முழுபலத்தோடு இருந்தாலும், பேரெண்ணிக்கை கொண்டிருந்தாலும்,
முற்றாக வெட்டப்பட்டு அடித்துச் செல்லப்படுவார்கள்#1:12 அடித்துச் செல்லப்படுவார்கள் – அழிந்து போவார்கள்.
யூதாவே! நான் உன்னை துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும்,
இனிமேலும் நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்காதிருப்பேன்.
13இப்போது உன் கழுத்திலிருக்கும், அசீரியர்கள் சுமத்திய#1:13 அசீரியர்கள் சுமத்திய – எபிரேய மொழியில் அவர்களுடைய நுகத்தை நான் உடைத்துப் போடுவேன்.
உனது கட்டுகளை அறுத்து விடுவேன்.”
14நினிவே அரசனே! கர்த்தர் உன்னைக் குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கின்றார்:
“உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள்.
உன் தெய்வங்களின் கோயில்களில் இருக்கின்ற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
உலோகத்தில் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன்.
நீ வெறுப்புக்குரியவனாகையால்
நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
15யூதாவே#1:15 யூதாவே – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது! இதோ சமாதானத்தை அறிவித்து,
நற்செய்தி கொண்டு வருகின்றவனுடைய கால்கள்,
உன் மலைகள்மேல் வருகின்றன.#1:15 ஏசா. 52:7
“உன் பண்டிகைகளைக் கொண்டாடு.
உன் நேர்த்திக்கடன்களை நிறைவேற்று.
கொடும் பாதகன் இனி உன்மேல் படையெடுத்து வரப்போவதில்லை;
அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டார்கள்”
என்பதே அந்த செய்தி.