YouVersion Logo
Search Icon

புலம்பல் 1

1
1ஒரு காலத்தில் மக்களால் நிறைந்திருந்தவள்,#1:1 இது எருசலேமை குறிக்கிறது.
இப்போது எவ்வளவு பாழாக விடப்பட்டிருக்கிறாள்!
ஒரு காலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள்,
இன்று ஒரு கணவனை இழந்த பெண்ணைப் போலானாளே!
மாகாணங்களின் மத்தியில் அரசியாய் இருந்தவள்
இப்போது அடிமையானாளே!
2இரவில் அவள் மனம்வெதும்பி அழுகிறாள்,
அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது.
அவளை ஆறுதல்படுத்த,
அவளது காதலர்களில் ஒருவருமில்லை.
அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்;
அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
3வேதனையையும் கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின்,
யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள்.
பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்;
ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் கிடைக்கவில்லை.
அவளுடைய துயரத்தின் மத்தியில்
அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக் கொண்டார்கள்.
4நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால்,
சீயோனுக்குச் செல்லும் வீதிகள் துக்கம் அனுஷ்டிக்கின்றன.
அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன.
அவளுடைய மதகுருக்கள் புலம்புகிறார்கள்.
அவளுடைய இளம்பெண்கள் துயரம் கொள்கிறார்கள்,
அவள் கசப்பான வேதனையில் இருக்கின்றாள்.
5அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்;
அவளுடைய பகைவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள்.
அவளுடைய அநேக பாவங்களின் பொருட்டு
கர்த்தர் அவளுக்கு மனத்துயரைக் கொடுத்தார்.
அவளுடைய பிள்ளைகள், எதிரிக்கு முன்பாக
சிறைப்பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
6சீயோன் மகளின்
சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று.
அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலைக் காணாத
மான்களைப் போலானார்கள்;
அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக
பலவீனமடைந்து தப்பி ஓடினார்கள்.
7எருசலேம் துன்பமுற்று அலைந்த நாட்களில்,
முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த
செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள்.
அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது,
அவளுக்கு உதவி செய்ய ஒருவரும் இருந்ததில்லை.
மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு,
அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தனர்.
8எருசலேம் பெரும்பாவம் செய்து அசுத்தமடைந்தாள்.
அவளை கௌரவப்படுத்திய யாவரும்
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதனால்,
அவளை அவமதிக்கிறார்கள்;
அவள் தனக்குள் அழுது,
தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
9அவளுடைய அசுத்தம் அவளுடைய ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது;
அவள் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவில்லை.
ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது;
அவளை தேற்றுவார் எவருமில்லை.
“கர்த்தரே, என் துன்பத்தைப் பார்த்திடுவீர்;
என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே”
என்று அவள் அழுகிறாள்.
10அவளது இன்பமான திரவியம் அனைத்தின்மீதும்
பகைவன் தன் கைகளை வைத்தான்.
அவளுடைய பரிசுத்த இடத்துக்குள்
பிறநாட்டவர் நுழைவதை அவள் கண்டாள்.
கர்த்தர் தடை செய்தவர்கள்
அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
11அவளுடைய மக்கள் யாவரும்
அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக தங்கள் விலையுயர்ந்த பொருட்களை
உணவுக்காக பண்டமாற்று செய்கின்றார்கள்.
“கர்த்தரே கவனித்துப் பாரும்!
நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்”
என அவள் துயருறுகிறாள்.
12“இந்த வழியாய் கடந்துபோகின்றவர்களே,
உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ?
சுற்றிலும் நோக்கிப் பாருங்கள்.
கர்த்தர் தமது கடுங்கோபத்தின் நாளில்,
என்மீது கொண்டுவந்த வேதனையைப் போன்ற
வேதனை ஏதும் உண்டோ?
13“அவர் உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார்.
அதை எனது எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்.
அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து,
என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார்.
அவர் என்னைப் பாழாக்கி,
நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
14“என்னுடைய பாவங்கள் ஒரு நுகம் போன்று கட்டப்பட்டிருக்கின்றன;
அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு,
என் கழுத்தின்மீது போடப்பட்டுள்ளன.
ஆண்டவர், என் வலிமையில் நான் குறைந்துபோகும்படி செய்தார்.
என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில்
என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
15“என் மத்தியிலிருந்த இராணுவ வீரர்களையெல்லாம்
ஆண்டவர் புறக்கணித்துவிட்டார்;
என்னிடமுள்ள என் வாலிபரை நசுக்கும்படி,
எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார்.
யூதாவாகிய கன்னிமகளைக் கர்த்தர்
தமது திராட்சை ஆலையில் மிதித்துப் போட்டார்.
16“இதனாலேயே நான் அழுகிறேன்.
என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.
என்னைத் தேற்ற என் அருகில் எவருமில்லை.
என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் எவருமில்லை.
பகைவன் வெற்றிகொண்டபடியினால்,
என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
17சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள்,
அவளை ஆறுதல்படுத்த எவருமில்லை.
யாக்கோபுக்கு அவனது அயலவர்களை
பகைவர்களாகும்படி கர்த்தர் நியமித்திருக்கிறார்;
அவர்கள் மத்தியில் எருசலேம்
ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
18“கர்த்தர் நேர்மையுள்ளவர்,
இருந்தபோதிலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன்.
மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்;
என்னுடைய துன்பத்தைப் பாருங்கள்.
என் இளைஞரும், இளம்பெண்களும்
நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
19“நான் என் காதலர்களை அழைத்தேன்,
அவர்களோ எனக்குத் துரோகம் செய்தார்கள்.
என்னுடைய மதகுருக்களும்,
முதியோரும் தங்கள் உயிரைக் காக்க
உணவு தேடுகையில்,
பட்டணத்தில் அழிந்து போனார்கள்.
20“கர்த்தரே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன்!
நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன்.
என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன்.
ஏனெனில் நான் அதிகமாய் கலகம் செய்தேன்.
வெளியே, பிள்ளைகள் வாளால் அழிகின்றனர்;
உள்ளே, மரணம் நிலைகொண்டிருக்கிறது.
21“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள்,
ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ எவருமில்லை.
என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு,
நீரே அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள்.
அவர்களும் என்னைப் போலாகும்படி நீர்
அறிவித்த தண்டனையின் அந்த நாளை வரச் செய்வீராக.
22“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்;
என்னுடைய அனைத்து பாவங்களுக்காகவும்
நீர் என்னை தண்டித்ததைப் போன்று,
அவர்களுக்கும் தண்டனை வழங்குவீராக.
என் புலம்பல்கள் ஏராளம்,
என் இருதயமும் சோர்ந்து போகின்றது.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in