YouVersion Logo
Search Icon

ஆபகூக் 2

2
1நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன்.
காவல் அரண்கள்மீது நான் நிலைகொள்வேன்.
கர்த்தர் எனக்கு என்ன சொல்வார் என்று அறிவதற்காக நான் பார்த்திருப்பேன்.
அவர் என் முறைப்பாட்டைக் கண்டிப்பாரானால்,
என்ன பதில் சொல்வது எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.#2:1 சில மொழிபெயர்ப்புகளில் அவர் என் முறைப்பாடு குறித்து என்ன சொல்வார் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் என்றுள்ளது.
கர்த்தரின் பதில்
2அப்போது கர்த்தர் எனக்குப் பதிலளித்துச் சொன்னதாவது:
“இந்த வெளிப்படுத்துதலை எழுதி வை,
அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை.
அதை வாசிப்பவன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும்.
3இந்த வெளிப்படுத்தல் அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில்
நிறைவேறக் காத்திருக்கிறது.
அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது,
அது பொய்யாய் போக மாட்டாது.
அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும்,
அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும்;
அது தாமதிக்காது.
4“பார், எதிரியானவன் தற்பெருமை கொண்டிருக்கிறான்.
அவனது ஆசைகள் நேர்மையானவை அல்ல;
ஆனால் நீதிமானோ அவரது விசுவாசத்தினாலே வாழ்வார்.
5உண்மையாகவே, செல்வம்#2:5 செல்வம் அல்லது மதுபானம் அவனுக்குத் துரோகம் செய்கின்றது;
அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கின்றான்.
ஏனெனில் அவன் பாதாளத்தைப் போல் பேராசை உள்ளவனாகவும்,
மரணத்தைப் போன்று திருப்தி அற்றவனாகவும் இருக்கின்றான்.
அதனால் அவன் அனைத்து இனங்களையும் தனக்கெனச் சேர்த்துக் கொள்கிறான்.
அனைத்து மக்கள் கூட்டங்களையும் பிடித்து கைதிகளாகக் கொண்டுபோகின்றான்.
6“அவர்கள் எல்லோரும் அவனை நிந்தித்து அவதூறு செய்து, இவ்வாறு பழிசொல்ல மாட்டார்களோ:
“ ‘களவாடிய பொருட்களைக் குவித்து, பலவந்தமாய் பணம் பறித்து,
செல்வந்தனாகிற உனக்கு ஐயோ பேரழிவு!
எவ்வளவு காலத்துக்கு இது நடக்கப் போகின்றது?’
7உன் கடன்காரர்கள் திடீரென்று எழுந்திட மாட்டார்களோ?
அவர்கள் எழுந்து உன்னை நடுங்கவைக்க மாட்டார்களோ?
அப்போது அவர்கள் உன்னைச் சூறையாடுவார்களே.
8பல இனங்களை நீ கொள்ளையடித்ததனால்,
எஞ்சியிருக்கும் மக்கள் கூட்டத்தினர் உன்னைக் கொள்ளையடிப்பார்களே.
ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாடுகளையும் நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
9“அநியாயமான ஆதாயத்தினால் தன் வீட்டைக் கட்டுகிறவனுக்கு ஐயோ பேரழிவு!
அவன் அழிவின் பிடியிலிருந்து தப்பிக்கொள்ள
தன் கூட்டை உயரத்தில் கட்டப் பார்க்கின்றானே!
10நீ அநேக மக்கள் கூட்டங்களை அழிக்கும்படி சூழ்ச்சி செய்தாய்.
அதனால் உன் வீட்டுக்கு வெட்கத்தையும், உன் உயிருக்கு அழிவையும் தேடிக்கொண்டாய்.
11உன் வீட்டுச் சுவரின் கற்கள் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்.
மரவேலைப்பாடுகள் உள்ள உத்திரங்கள் அதை எதிரொலிக்கும்.
12“இரத்தம் சிந்துவதனால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி,
குற்றச் செயலால் ஒரு பட்டணத்தை நிலைநிறுத்துகிறவனுக்கு ஐயோ பேரழிவு!
13மக்களின் உழைப்பு நெருப்புக்கான விறகாவதும்,
நாடுகளின் முடிவில்லாத உழைப்பு பயனற்றதாகப் போவதும்
சேனைகளின் கர்த்தருடைய செயல் அல்லவோ?
14கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பது போல,
பூமி கர்த்தரின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
15“தன் அயலவர்களுக்கு அவர்கள் போதையேறும் வரை
தோற்பையிலிருந்து மதுவை ஊற்றி குடிக்கக் கொடுக்கின்றவனுக்கு ஐயோ பேரழிவு!
அவன் அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படி இப்படிச் செய்கின்றானே!
16நீ மேன்மைக்குப் பதிலாக அவமானத்தால் நிரப்பப்படுவாய்.
இப்போது உன்னுடைய முறை வந்துவிட்டது!
நீயும் குடித்து உன் நிர்வாணத்தை வெளியே காட்டு!
கர்த்தரின் வலதுகையிலுள்ள தண்டனையின் கிண்ணம் உன்மேல் வருகின்றது,
அப்போது உன் மேன்மையை அவமானம் மூடிவிடும்.
17நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை வெற்றிகொள்ளும்.
நீ மிருகங்களுக்குச் செய்த பேரழிவு உனக்குத் திகிலூட்டும்.
ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
18“ஒரு விக்கிரகத்துக்கு என்ன பெறுமதி உண்டு? அதை ஒரு சிற்பி அல்லவோ செதுக்கினான்?
பொய்களைப் போதிக்கும் ஒரு உருவச்சிலைக்கு என்ன பெறுமதி உண்டு?
ஏனென்றால் அதை செய்பவன், தான் உருவாக்கியதிலேயே நம்பிக்கையை வைக்கிறான்;
அவன் வாய் பேச இயலாத விக்கிரகங்களைச் செய்கின்றான்.
19மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப் பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும்,
உயிரற்ற கற்சிலையைப் பார்த்து, ‘எழுந்திரு’ என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ பேரழிவு!
இவற்றினால் வழிகாட்ட முடியுமா?
இவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மூடப்பட்டிருக்கின்றன;
இவற்றிலே சுவாசம் இல்லை.”
20ஆனால் கர்த்தரோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கின்றார்;
பூமி முழுவதும் அவருக்கு முன் மௌனமாய் இருப்பதாக.

Currently Selected:

ஆபகூக் 2: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in