YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 47

47
1யோசேப்பு பார்வோனிடம் சென்று, “என் தந்தையும் என் சகோதரர்களும் தங்களுடைய ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் கானான் நாட்டிலிருந்து வந்து, இப்போது கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். 2அவன் தன் சகோதரர்களில் ஐந்து பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான்.
3அப்போது பார்வோன் அந்தச் சகோதரர்களிடம், “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “உமது அடியவர்களாகிய நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போலவே மந்தை மேய்ப்பவர்கள்” என்றார்கள். 4மேலும் அவர்கள் பார்வோனிடம், “கானான் நாட்டில் பஞ்சம் கொடியதாய் இருப்பதால், உமது அடியவரின் மந்தைக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. ஆகையால், தயவுசெய்து உமது அடியவராகிய எங்களைக் கோசேனில் குடியிருக்க அனுமதிப்பீராக” என்றார்கள்.
5அதற்குப் பார்வோன் யோசேப்பிடம், “உன் தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கின்றார்கள். 6இதோ, எகிப்து நாடு உனக்கு முன்பாக இருக்கின்றது; உன் தந்தையையும் சகோதரர்களையும் நாட்டின் சிறந்த இடத்தில் குடியமர்த்து. அவர்கள் கோசேனில் குடியிருக்கட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் இருப்பார்களானால், அவர்கள் என் கால்நடைகளுக்குப் பொறுப்பாய் இருக்கட்டும்” என்றான்.
7பின்பு யோசேப்பு தன் தந்தை யாக்கோபைப் பார்வோனுக்கு முன்பாக அழைத்து வந்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். 8பார்வோன் யாக்கோபிடம், “நீர் வாழ்ந்த வருடங்கள் எத்தனை?” என்று கேட்டான்.
9அதற்கு யாக்கோபு பார்வோனிடம், “என் வாழ்க்கைப் பயணம் நூற்று முப்பது வருடங்கள். என் வருடங்கள் என் முற்பிதாக்களின் வாழ்க்கைப் பயணத்தின் வருடங்களுக்குச் சமமானவை அல்ல; அவை குறைவானவையாயும் கடினமானவையாயும் இருந்தன” என்றான். 10பின்பு யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
11பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தந்தையையும் சகோதரர்களையும் எகிப்தில் குடியேற்றி, நாட்டின் சிறந்த இடமான ராமசேஸ் என்னும் பட்டணத்தில் அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்தான். 12யோசேப்பு தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் தன் தந்தை வீட்டார் அனைவருக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி உணவையும் வழங்கி வந்தான்.
யோசேப்பும் பஞ்சமும்
13ஆனாலும் பஞ்சம் மிகவும் கொடியதாக இருந்தபடியால், முழு நாட்டிலும் உணவு இல்லாமற் போயிற்று; எகிப்தும் கானானும் பஞ்சத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. 14யோசேப்பு தானியம் விற்பனை செய்து, அதனூடாக எகிப்து மற்றும் கானான் மக்களின் கையில் இருந்த பணம் முழுவதையும் பெற்று, அதைச் சேர்த்து பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். 15எகிப்திலும் கானானிலும் உள்ள மக்களின் பணமெல்லாம் செலவழிந்து போயிற்று. அப்போது எகிப்திய மக்கள் எல்லோரும் யோசேப்பிடம் வந்து, “எங்களுக்கு உணவு தந்தருள்வீராக. உமது கண்களுக்கு முன்பாக நாங்கள் எல்லோரும் ஏன் மரணிக்க வேண்டும்? எங்களுடைய பணமெல்லாம் செலவழிந்து விட்டது” என்றார்கள்.
16அதற்கு யோசேப்பு, “அவ்வாறெனின் உங்கள் கால்நடைகளைக் கொண்டுவாருங்கள். பணம் செலவழிந்து போனபடியால், உங்கள் கால்நடைகளுக்குப் பதிலாக நான் தானியம் தருகின்றேன்” என்றான். 17அவ்வாறே அவர்கள் தங்கள் கால்நடைகளை யோசேப்பிடம் கொண்டுவந்தார்கள்; அவன் அவர்களுடைய குதிரைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், மாடுகள், கழுதைகள் முதலியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாகத் தானியம் கொடுத்தான். இவ்வாறு அந்த வருடம் முழுவதும் அவர்களுடைய கால்நடைகளுக்குப் பதிலாகத் தானியம் கொடுத்துவந்தான்.
18அந்த வருடம் கழிந்து, அடுத்த வருடம் அவர்கள் திரும்பவும் யோசேப்பிடம் வந்து, “ஆண்டவனே, உம்மிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களிடமிருந்த பணமெல்லாம் முடிந்து, எங்கள் கால்நடைகளும் உமக்கு உரியனவாகி விட்டன என்பது உமக்குத் தெரியும். எங்கள் ஆண்டவனுக்குக் கொடுப்பதற்கு எங்கள் உடல்களையும் நிலங்களையும் தவிர வேறொன்றுமில்லை. 19நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிய வேண்டுமா? உணவுக்குப் பதிலாக எங்களையும் எங்கள் நிலத்தையும் நீர் வாங்கிக்கொள்ளும்; நாங்கள் எங்கள் நிலத்துடன் பார்வோனின் அடிமைகளாவோம். நாங்கள் உயிரிழக்காமல் வாழ்வதற்கும் எங்கள் நிலம் பாழாய்ப் போகாதிருக்கவும் எங்களுக்குத் தானியவிதைகளைத் தந்தருள்வீராக!” என்றார்கள்.
20ஆகவே யோசேப்பு எகிப்திலுள்ள நிலங்கள் அனைத்தையும் பார்வோனுக்காக வாங்கினான். எகிப்தில் பஞ்சம் கொடியதாய் இருந்ததால், எகிப்தியர் ஒவ்வொருவரும் தங்கள் நிலங்களை விற்றார்கள். நிலங்கள் பார்வோனுக்குச் சொந்தமாயின. 21யோசேப்பு எகிப்தின் ஒரு எல்லை தொடங்கி மறு எல்லை வரையும் உள்ள பட்டணங்களில், அம்மக்களை இடம் மாற்றி அவர்களை அடிமைகளாகக் குடியமர்த்தினான்.#47:21 அல்லது – அவன் அவர்களை பார்வோனின் அடிமைகளாக அமர்த்தினான். 22ஆனாலும் பார்வோனிடமிருந்து மதகுருக்கள் நேரடியாக மானியத்தைப் பெற்றுக்கொண்டதால், மதகுருக்களுடைய நிலத்தை அவன் வாங்கவில்லை; ஏனெனில், கிடைத்த தானியம் அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. அதனால் அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
23அப்போது யோசேப்பு மக்களிடம், “இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் நான் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். இதோ உங்களுக்கு தானியவிதைகள் தருகின்றேன், நீங்கள் போய் நிலத்தில் பயிரிடுங்கள். 24ஆனால் நீங்கள் உங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்க வேண்டும். மீதி நான்கு பங்கை வயல்களின் தானியவிதைகளுக்காகவும், உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உணவுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
25அதற்கு அவர்கள், “ஆண்டவனே, நீர் எங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றீர்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருப்போம்; உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவு கிடைத்தாலே போதும்” என்றார்கள்.
26எனவே யோசேப்பு, “நிலத்தின் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கு பார்வோனுக்குரியது” என்ற எகிப்தின் நிலச் சட்டத்தை ஏற்படுத்தினான். அது இன்றுவரை அமுலில் இருக்கின்றது. மதகுருக்களுடைய நிலங்கள் மட்டும் பார்வோனுக்கு உரித்தாகாமல் இருந்தன.
27இஸ்ரயேலர் எகிப்திலுள்ள கோசேன் பிரதேசத்தில் குடியிருந்தார்கள். அங்கே அவர்கள் தமக்குச் சொத்துக்களைச் சம்பாதித்து இனவிருத்தி அடைந்து எண்ணிக்கையில் மிக அதிகமானார்கள்.
28யாக்கோபு எகிப்தில் பதினேழு வருடங்கள் வாழ்ந்தான். அவனுடைய வாழ்நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருடங்கள். 29இஸ்ரயேல் தனது மரணத்தறுவாய் நெருங்கியபோது, அவன் தன் மகன் யோசேப்பை அழைத்து அவனிடம், “எனக்கு உன்னிடத்தில் தயவு கிடைக்குமானால், நீ உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, நீ எனக்குத் தயவும் உண்மையும் உள்ளவனாய் இருப்பாய் என சத்தியம் செய். என்னை நீ எகிப்திலே அடக்கம் செய்ய வேண்டாம். 30நான் மரணிக்கும்போது என் உடலை எகிப்திலிருந்து கொண்டுபோய், என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலே என்னையும் அடக்கம் செய்யவேண்டும்” என்றான்.
அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்வேன்” என்றான்.
31“நீ எனக்குச் சத்தியம் செய்துகொடு” என்று இஸ்ரயேல் கேட்டதும், யோசேப்பு சத்தியம் செய்து கொடுத்தான். அப்போது இஸ்ரயேல் தனது கட்டிலின் தலைப் பக்கமாக சாய்ந்துகொண்டு வழிபட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in