YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 20

20
பத்துக் கட்டளைகள்
1பின்னர் இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்:
2“உன்னை அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து, வெளியே அழைத்து வந்த உன் இறைவனாகிய கர்த்தர் நானே.”
3“எனக்கு முன்பாக#20:3 எனக்கு முன்பாக என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உன்னிடம் இருக்க வேண்டாம்.
4மேலே வானத்திலும், கீழே பூமியிலும், அதன் கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கின்ற எந்தவொரு உருவத்திலேனும் உனக்காக நீ உருவச்சிலையைச் செய்ய வேண்டாம். 5நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், நானே உன் இறைவனாகிய கர்த்தர், நான் வைராக்கியமுள்ளவராயிருந்து, என்னை வெறுப்பவர்களின் காரணமாக, பெற்றோரின் பாவத்துக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கின்றவராய் இருக்கின்றேன். 6ஆனால் என்னிடம் அன்புகொண்டு என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களின், ஆயிரம் தலைமுறையினருக்கு நிலையான அன்பைக் காட்டுவேன்.
7உன் இறைவனாகிய கர்த்தரின் பெயரை வீணாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், கர்த்தர் தமது பெயரை வீணாகப் பயன்படுத்துகின்ற எவனையும் குற்றமற்றவனாய் தப்பிச் சென்று விடுவதற்கு விடமாட்டார்.
8சபத் ஓய்வுநாளைப் பரிசுத்த நாளாகக் கைக்கொள்வாயாக. 9நீ வாரத்தின் ஆறு நாட்களும் உழைத்து, உன் அனைத்து வேலைகளையும் செய்யலாம். 10வாரத்தின் ஏழாம் நாளோ உன் இறைவனாகிய கர்த்தரின் சபத் ஓய்வுநாள். அந்தநாளில் நீ ஒரு வேலையும் செய்யக் கூடாது. நீயோ, உன் மகனோ மகளோ, உன் பணியாளனோ பணிப்பெண்ணோ, உன் எருதோ கழுதையோ, உன் மிருகங்களில் எதுவாயினும் அல்லது உன் பட்டண வாயிலுக்குள் இருக்கின்ற அந்நியனாயினும் ஒரு வேலையும் செய்யக் கூடாது. 11ஏனெனில், கர்த்தர் வானங்களையும், பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதனால் சபத் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12உன் இறைவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக்கின்றபடியே, உன் தந்தைக்கும் உன் தாய்க்கும் மதிப்பளித்திடுவாயாக. அப்போது உன் இறைவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் அந்த நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.
13கொலை செய்யாதிருப்பாயாக.
14தகாத உறவில் ஈடுபடாதிருப்பாயாக.
15களவு செய்யாதிருப்பாயாக.
16உன் அயலவனுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி செய்யாதிருப்பாயாக.
17உன் அயலவனுடைய மனைவியை அபகரிக்க ஆசைகொள்ளாதிருப்பாயாக. உன் அயலவனுடைய வீட்டையோ, நிலத்தையோ, பணியாளனையோ பணிப்பெண்ணையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குச் சொந்தமான வேறு எதையுமோ அபகரிக்க ஆசைகொள்ளாதிருப்பாயாக.”
18மக்கள் இடி முழக்கத்தையும், மின்னலையும், எக்காள சத்தத்தையும் கண்டும், கேட்டும், மலை புகையால் சூழப்பட்டதைப் பார்த்தபோது பயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தொலைவிலே நின்று, 19மோசேயிடம், “நீர் எங்களுடன் பேசும்; நாங்கள் செவிமடுப்போம். இறைவன் எங்களுடன் பேச வேண்டாம். பேசினால் நாங்கள் மரணிப்போம்” என்றார்கள்.
20அப்போது மோசே மக்களிடம், “பயப்பட வேண்டாம். உங்களை சோதிக்கவும், நீங்கள் பாவம் செய்யாதபடி இறைவனைப்பற்றிய பயம் உங்களோடிருக்க வேண்டும் என்பதற்காகவும் இறைவன் உங்களிடம் வந்திருக்கிறார்” என்றார்.
21மக்கள் தூரத்தில் நின்றபோது, மோசே இறைவனிருந்த காரிருளை நோக்கிப் போனார்.
விக்கிரகங்களும் பலிபீடங்களும்
22அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே: நான் வானத்திலிருந்து உங்களோடு பேசியதை நீங்களே கண்டிருக்கின்றீர்கள். 23ஆகவே என்னோடு சேர்த்து வழிபடும்படி வெள்ளியினாலோ தங்கத்தினாலோ உங்களுக்கென தெய்வங்களை உருவாக்க வேண்டாம்.
24“எனக்காக மண்ணினாலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் எனக்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், மாடுகளையும் தகனபலியாகவும், சமாதானபலியாகவும் பலி செலுத்துங்கள். என் பெயரை நான் மகிமைப்படும்படி செய்கின்ற இடங்களிலெல்லாம், நான் உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25எனக்குக் கல்லினால் ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டுமானால், அதை வெட்டப்பட்ட கற்களினால் கட்ட வேண்டாம். ஏனெனில் அதன்மீது ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதைக் கறைப்படுத்துவீர்கள். 26மேலும், உங்கள் அந்தரங்க உறுப்புகள் வெளிப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்துக்கு படிகளில் ஏறிப்போக வேண்டாம்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in