YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 1

1
இஸ்ரயேலர் ஒடுக்கப்பட்டமை
1தத்தமது குடும்பங்களுடன், எகிப்துக்குப் போன இஸ்ரயேல் எனப்படும் யாக்கோபின் மகன்மாரின் பெயர்களாவன:
2ரூபன், சிமியோன், லேவி, யூதா,
3இசக்கார், செபுலோன், பென்யமீன்,
4தாண், நப்தலி,
காத், ஆசேர்.
5யாக்கோபின் சந்ததிகள் மொத்தமாக எழுபது பேர். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
6காலப்போக்கில் யோசேப்பும், அவனுடைய அனைத்து சகோதரரும், அந்தத் தலைமுறையினர் யாவரும் இறந்து போனார்கள். 7ஆனால், இஸ்ரயேலர் வளம்பெற்று, அதிகமாகப் பெருகினார்கள்; எகிப்து தேசம் அவர்களால் நிரம்பும் அளவுக்கு அவர்கள் எண்ணிக்கையில் பல்கிப் பெருகினார்கள்.
8அப்போது யோசேப்பைப்பற்றி எதுவும் அறியாத ஒரு புதிய அரசன் எகிப்தில் ஆட்சிக்கு வந்தான். 9அவன் தன் மக்களிடம், “பாருங்கள்! இஸ்ரயேலரோ நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், பலமுள்ளவர்களுமாய் இருக்கின்றார்கள். 10வாருங்கள்! நாம் அவர்களை புத்திசாதுரியமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகி, ஒரு யுத்தம் மூண்டால் நம் பகைவர்களோடு சேர்ந்து எங்களுக்கு விரோதமாகப் போரிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள்” என்றான்.
11எனவே அவர்கள் இஸ்ரயேலர்களைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தி ஒடுக்குவதற்கு அதிகாரிகளை அவர்களுக்கு மேலாக நியமித்தார்கள். இவ்வாறு அவர்கள் களஞ்சியப் பட்டணங்களாக பித்தோம், ராமசேஸ் என்னும் பட்டணங்களைப் பார்வோனுக்காகக் கட்டுவித்தார்கள். 12ஆனால் இஸ்ரயேலர் எவ்வளவு அதிகமாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவு அதிகமாய் பெருகிப் பரவினார்கள்; இதனால் எகிப்தியர் இஸ்ரயேலரைக் குறித்து எரிச்சல் அடைந்து, 13இஸ்ரயேலரிடம் கொடூரமாக வேலை வாங்கினார்கள். 14செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லாவிதமான வேலைகளினாலும் எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கி, கடின வேலைகளினால் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள்.
15அதன் பின்னர் எகிப்திய அரசன், சிப்பிராள் மற்றும் பூவாள் என்னும் பெயர்களையுடைய எபிரேய மகப்பேற்றுத் தாதிகளிடம், 16“எபிரேய பெண்களின் பிரசவ நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு உதவும்போது, அவர்கள் பிரசவப் படுக்கையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, ஆண் குழந்தையானால் அதைக் கொன்று விடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான். 17ஆனாலும் மகப்பேற்றுத் தாதிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யக் கட்டளையிட்டதைச் செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் வாழ விட்டார்கள். 18இதை அறிந்த எகிப்திய அரசன் மகப்பேற்றுத் தாதிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டீர்கள்?” என்று கேட்டான்.
19மகப்பேற்றுத் தாதிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரேய பெண்கள் எகிப்தியப் பெண்களைப் போன்றவர்களல்லர்; அவர்கள் பலமுள்ளவர்கள். அதனால் மகப்பேற்றுத் தாதிகள் தங்களிடம் வருவதற்கு முன்பே குழந்தைகளைப் பெற்று விடுகிறார்கள்” என்றார்கள்.
20இதனால் இறைவன் மகப்பேற்றுத் தாதிகளுக்குத் தயவு காட்டினார். இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள். 21மகப்பேற்றுத் தாதிகள் இறைவனுக்குப் பயந்ததால், அவர் அவர்களுடைய குடும்பங்களை விருத்தியடையச் செய்தார்.
22பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரேயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் பிள்ளையையும் நீங்கள் நைல் நதியில் வீசிவிட வேண்டும்; ஆனால் பெண் பிள்ளைகளை வாழவிடுங்கள்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in