YouVersion Logo
Search Icon

எஸ்தர் 1

1
வஸ்தி அரசி நீக்கப்படுதல்
1அகாஸ்வேரு அரசனின் காலத்தில் நிகழ்ந்தது இதுவே: இவ்வரசனே இந்திய தேசம் முதல் எத்தியோப்பியா வரை#1:1 எத்தியோப்பியா வரை அல்லது கூஷ் நாடுவரை பரந்திருந்த 127 மாகாணங்களை அரசாட்சி செய்த அகாஸ்வேரு அரசன். 2அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன், சூசான்#1:2 சூசான் – பொர்சியாவின் தலைநகரம். எனப்பட்ட அரணிடப்பட்ட கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான். 3அவன் தனது ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் தனது உயர்குடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த விருந்துபசாரத்துக்கு பெர்சியா, மேதியா ஆகிய நாடுகளின் சேனாதிபதிகளும், இளவரசர்களும், மாகாணங்களின் உயர்குடி மக்களும் வருகை தந்திருந்தார்கள்.
4அவ்வேளையில் அவன் தனது அரசின் பெருந்திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும், மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான்; அதுவும் நூற்றெண்பது நாட்களாகக் காண்பித்தான்! 5இந்த விருந்துபசார நாட்கள் முடிவடைந்த பின்னர், அரச அரண்மனையில் அமைந்திருந்த உள்ளரங்க பூங்காவன வளாகத்தில், ஒரு விருந்துபசாரத்தை அளித்தான். அந்த விருந்துபசாரம் ஏழு நாட்களுக்கு நீடித்தது. அரணிடப்பட்ட கோட்டைப் பட்டணமாகிய சூசானிலிருந்த சிறியோர் பெரியோரான அனைத்துக் குடிமக்களையும் அதற்கென அழைத்திருந்தான். 6அந்தப் பூங்காவில் வெள்ளை மற்றும் நீல வண்ணங்களினாலான மென்பட்டிலான திரைச்சீலைகள் இடப்பட்டிருந்தன. அவை வெண்ணிற மென்பட்டினாலும், ஊதா நிறத் துணியினாலும் திரிக்கப்பட்ட நாடாக்களினால் பளிங்குத் தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிக்க முடியாத மாணிக்கக் கற்கள் ஆகியவை பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பஞ்சணைகள் இடப்பட்டிருந்தன. 7திராட்சைரசம், பல்வேறு வகையான தங்கக்கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அரசனுடைய தாராள சிந்தையின்படியே அரசருக்குரிய திராட்சைரசம் தாராளமாக அனைவருக்கும் கிடைத்தது. 8அரசனுடைய கட்டளைப்படியே அனைத்து விருந்தாளிகளும் தாங்கள் விரும்பியபடி குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அரசன் தனது திராட்சைரசப் பொறுப்பாளர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு ஆளும் கேட்கும் அளவு திராட்சைரசத்தைப் பரிமாறும்படி அறிவுறுத்தியிருந்தான்.
9அதேவிதமாக அரசியாகிய வஸ்தியும் அகாஸ்வேருவின் அரண்மனையில் இருந்த பெண்மணிகளுக்கு ஒரு விருந்துபசாரம் அளித்தாள்.
10அகாஸ்வேரு அரசன் ஏற்பாடு செய்திருந்த விருந்தின் ஏழாம் நாளில் திராட்சை மதுவினால் போதையேறிய நிலையில் இருந்த அகாஸ்வேரு அரசன், தனக்குப் பணி செய்த மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய அண்ணகர்களான#1:10 அண்ணகர்களான – விதைத் தறிப்புச் செய்யப்பட்டு, அரண்மனையில் சேவைக்கு அமர்த்தப்பட்ட ஆண் சேவகர்கள். ஏழு அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டு, 11“அரசி வஸ்தியின் அழகை மக்களுக்கும் உயர்குடியினருக்கும் காண்பிக்கும் வகையில், அவளுக்கு அரச கிரீடத்தை சூட்டி, அரசருக்கு முன்பாக அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். ஏனெனில் அவள் காண்பதற்கு பேரழகு பொருந்தியவளாக இருந்தாள். 12ஆனால், அண்ணகர்களான அந்த ஏவலாளர்கள் அரசனுடைய கட்டளையை அரசி வஸ்தியிடம் தெரிவித்தபோது, அவள் தன்னால் வரமுடியாதென்று மறுத்துவிட்டாள். இதனால் அரசன் சினம் கொண்டான். அவனுடைய கோபம் அனலாகப் பற்றியெரிந்தது.
13சட்டம் மற்றும் நீதி விவகாரங்களில் நிபுணர்களாக இருந்தவர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே, காலங்களின் ஞானம் அறிந்த சான்றோருடன் இதுபற்றி கலந்தாலோசித்தான். 14அவ்வாறே அரசன் தனக்கு மிகவும் நெருங்கியவர்களாயிருந்த பெர்சிய, மேதிய நாடுகளின் ஏழு இளவரசர்களான கர்சேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோருடனும் உரையாடினான். இவர்கள் அரசனின் முன்பாக செல்வதற்கு விசேட அனுமதியுடையவர்களாகவும், இராச்சியத்தில் மிக உயர்ஸ்தானங்களை வகிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
15அகாஸ்வேரு அரசன் அவர்களிடம், “அரசனாகிய அகாஸ்வேரு, அண்ணகர்களான அதிகாரிகள் ஊடாக அரசியாகிய வஸ்தியிடம் தெரிவித்த அரச ஆணைக்கு அவள் கீழ்ப்படியவில்லை. ஆகவே சட்டத்தின்படி அரசி வஸ்தியானவள் எவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்?” என்று கேட்டான்.
16அப்போது மெமுகான் என்பவன் அரசனுக்கும் அரச பிரபுக்களுக்கும் முன்னிலையில், “அரசி வஸ்தி அரசனுக்கு மாத்திரமன்றி, உயர்குடியினருக்கும், அகாஸ்வேரு அரசனுடைய அனைத்து மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கும் எதிராக தவறிழைத்துள்ளாள். 17அரசியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்து விடும், அதன் விளைவாக அவர்கள் தங்கள் கணவன்மாரை உதாசீனம் செய்வார்கள். அத்தோடு, ‘அகாஸ்வேரு அரசன், அரசி வஸ்தியைத் தமக்கு முன்பாக வரும்படி கட்டளையிட்டும் அவள் அங்கே செல்லவில்லை’ என்றும் சொல்வார்கள். 18இந்த நாளிலேயே அரசியினுடைய நடத்தையைக் கேள்விப்பட்டிருக்கின்ற பெர்சிய, மேதிய நாடுகளின் உயர்குடிப் பெண்களும் இதேவிதமாக அரச பிரபுக்கள் எல்லோரிடமும் எதிர்த்துப் பேசுவார்கள். அவமதிப்புக்கும் கோபத்துக்கும் முடிவிருக்காது.
19“ஆகவே அரசர் விரும்பினால், வஸ்தி இனியொருபோதும் அரசன் அகாஸ்வேருவின் முன்பாக தோன்றக் கூடாது என்ற அரச கட்டளையை அறிவிப்பாராக! அதை, ரத்துச் செய்யப்பட முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களிலும் எழுதி வைப்பாராக! அத்துடன் அவளைவிட நல்லவளுக்கு அவளுடைய அரச பதவியைக் கொடுப்பாராக! 20அவ்வாறு அரச கட்டளை அவருடைய பரந்த பிரதேசம் எங்கும் அறிவிக்கப்படும்போது, உயர்நிலை முதற்கொண்டு சாதாரண நிலைவரை அனைத்துப் பெண்களும் தங்கள் கணவன்மாருக்கு மதிப்பளிப்பார்கள்” என்றான்.
21அரசனுக்கும், அவனுடைய உயர்குடியினருக்கும் இந்த ஆலோசனை பிரியமாயிருந்தது. எனவே மெமுகான் சொன்ன ஆலோசனையின்படியே அரசன் செயற்பட்டான். 22அவ்வாறே அவன் தனது இராச்சியத்தின் எல்லாப் பகுதிகளுக்கும், “ஒவ்வொரு கணவனும் தன் குடும்பத்தின்மீது அதிகாரியாயிருக்க வேண்டும்” என்று அறிவிக்கின்ற கடிதங்களைத் துரிதமாய் அனுப்பினான். இராச்சியத்தின் ஒவ்வொரு மாகாணத்துக்கும் அதற்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய சொந்த மொழியிலும் எழுதி அறிவித்தான்.

Currently Selected:

எஸ்தர் 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in