YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 1

1
1இறைவனுடைய திட்டப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும், பவுலும் நமது சகோதரன் தீமோத்தேயுவும்,
2கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கும், உண்மை உள்ளவர்களாயிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எழுதுவதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
3உங்களுக்காக நாங்கள் ஜெபம்செய்யும் போதெல்லாம், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்கின்றோம். 4ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பையும் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். 5இந்த விசுவாசமும் அன்பும் உங்களுக்கென பரலோகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதான எதிர்பார்ப்பில் இருந்தே வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைப் பற்றி, உங்களிடம் வந்ததான சத்திய வார்த்தையாகிய நற்செய்தியில் முன்னரே நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 6உங்களிடம் வந்த அந்த நற்செய்தியை நீங்கள் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட நாளிலிருந்து, இந்த நற்செய்தி உங்களிடையே செய்தது போன்று, உலகம் முழுவதும் கனி கொடுத்து அதிகரித்து வருகின்றது. 7இந்த நற்செய்தியை எங்கள் அன்புக்குரிய சக ஊழியக்காரனாகிய#1:7 ஊழியக்காரனாகிய – மூலமொழியில் இது அடிமை என்ற அர்த்தத்தில் குறிக்கப்பட்டுள்ளது. எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். அவன் எங்களுக்காக கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியனாக இருக்கின்றவன். 8ஆவியானவருக்குள்ளான உங்கள் அன்பைக் குறித்தும் அவனே எங்களுக்குத் தெரிவித்தான்.
9எனவே உங்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காகத் தவறாமல் ஜெபம்செய்து வருகின்றோம். நீங்கள் எல்லா ஆவிக்குரிய ஞானத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் அவருடைய சித்தத்தை அறிகின்ற அறிவினாலே நிரப்பப்பட வேண்டும் என்று உங்களுக்காக இறைவனிடம் கேட்கின்றோம். 10அவ்வாறு நிரப்பப்படுவதன் மூலம் நீங்கள் கர்த்தரை எல்லாவிதத்திலும் பிரியப்படுத்தி அவருக்கு தகுதியானபடி நடந்துகொள்ள வேண்டும். எல்லா நற்செயல்களின் ஊடாக கனி கொடுத்து, இறைவனைப்பற்றிய அறிவில் வளர்ச்சி அடைந்து, 11அவருடைய மகிமையான வலிமையிலிருந்து வரும் அனைத்து வல்லமையினாலும் நீங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலமாக நீங்கள் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும் உடையவர்களாய் இருந்து, 12ஒளியில்#1:12 ஒளியில் ஒளிமயமான பரலோக இராச்சியத்தில் என்று பொருள். இறைவனுடைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைச் சொத்தில் நீங்களும் பங்குள்ளவர்களாவதற்கு, உங்களைத் தகுதி உடையவர்களாக்கிய பிதாவுக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துகிறவர்களாய் இருக்கவேண்டும் எனவும் மன்றாடுகிறோம். 13ஏனெனில், அவரே நம்மை இருளின் ஆட்சியின் எல்லையிலிருந்து விடுவித்து, அவருடைய அன்பான மகனின்#1:13 மகனின் என்பது கிறிஸ்துவின் இராச்சியத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார். 14மகனாகிய அவருக்குள் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு இருக்கின்றது.
கிறிஸ்துவின் அதிமேன்மையான நிலை
15கண்ணுக்குப் புலப்படாதவராக இருக்கின்ற இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. அவரே எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர். 16அவர் மூலமே அனைத்தும் படைக்கப்பட்டன; வானத்திலும் பூமியிலும் உள்ள#1:16 வானத்திலும் பூமியிலும் உள்ள இறைவனின் அனைத்து படைப்புகளும் என்று பொருள் கண்ணுக்கு தென்படுகின்றவையோ, தென்படாதவையோ, அரசாட்சிகளோ,#1:16 அரசாட்சிகளோ – கிரேக்க மொழியில், அரியணைகளோ வல்லமைகளோ, ஆளுகின்றவர்களோ, அதிகாரங்களோ அனைத்துமே அவருக்கூடாக அவருக்கென்றே படைக்கப்பட்டன. 17அவரே அனைத்துக்கும் முற்பட்டவர். அவரிலேயே அனைத்தும் ஒருங்கிணைந்து நிலைநிற்கின்றன. 18அவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையானவர். அனைத்திலும் முதல் மேன்மை அடையும்படி, அவரே ஆரம்பமும் மரணித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவருமாய்#1:18 1 கொரி. 15:23 முதற்பேறானவருமாய் முதற்பலனுமாய் இருக்கின்றவர் என்றும் அர்த்தம்கொள்ளலாம். இருக்கின்றார். 19ஏனெனில் தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் குடியிருப்பது இறைவனுக்கு விருப்பமாயிற்று. 20அவர் மூலமாக அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்க இறைவன் விரும்பினார்; அவருடைய சிலுவையின் இரத்தத்தின் மூலமாக சமாதானத்தை ஏற்படுத்தி, அவர் வழியாக பூமியிலுள்ளவற்றையும் பரலோகத்திலுள்ளவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
21நீங்களோ முன்பு அந்நியராயிருந்து, உங்கள் தீய செயல்களால் உங்கள் சிந்தையில் பகைவர்களாய் இருந்தீர்கள் 22ஆனால் இப்பொழுதோ அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் கறைபடாதவர்களாகவும் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் தமக்கு முன்பாக நிறுத்துவதற்காக, தமது மரணத்தின் மூலமாக தமது மனித உடலிலே உங்களை ஒப்புரவாக்கினார் 23நீங்கள் விசுவாசத்தில் உறுதியாக வேரூன்றி நிலைத்திருந்தால், அதாவது கேட்டறிந்த நற்செய்தியின் எதிர்பார்ப்பிலிருந்து விலகாமல் இருந்தால் இவை நிறைவேறும். வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நற்செய்திக்கு பவுலாகிய நான் ஊழியனானேன்.
திருச்சபைக்கான பவுலின் பணி
24உங்களுக்காக நான் படுகின்ற துன்பங்களில் இப்போது மகிழ்ச்சியடைகிறேன். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்கான கிறிஸ்துவின் பெரும் வேதனைகளில் நிறைவாகாதவற்றை, எனது உடலில் நான் நிறைவாக்குகின்றேன். 25இறைவனுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவித்து நிறைவேற்றுகின்ற பொறுப்பாளனாக, இறைவன் என்னை நியமித்ததன்படி, நான் அவருடைய திருச்சபையின் பணியாளன் ஆகினேன். 26காலங்காலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டிருந்த இந்த மறைபொருள், இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27இந்த மறைபொருளின் மகிமையின் செல்வம், யூதரல்லாதவர்களுக்கு மத்தியில் எவ்வாறானது என்பதை, பரிசுத்தவான்களுக்கு#1:27 பரிசுத்தவான்களுக்கு – 26ம் வசனத்திலிருந்து விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டது வெளிப்படுத்த இறைவன் விரும்பினார். உங்களுக்குள் கிறிஸ்து இருக்கின்றார் என்பதே அந்த மறைபொருள், அதுவே மகிமையின் எதிர்பார்ப்பு.
28அவரையே நாங்கள் அறிவிக்கின்றோம்; ஒவ்வொருவரையும் கிறிஸ்துவுக்குள் முழுமை பெற்றவர்களாக நிறுத்துவதற்காக, ஒவ்வொருவரதும் தவறுகளை அறிவுறுத்தி, ஒவ்வொருவருக்கும் எல்லா ஞானத்தோடும் கற்பித்து செயற்படுகின்றோம். 29இதற்காகவே நானும் கடுமையாக உழைக்கின்றேன்; எனக்குள் வல்லமையாய் செயல்படுகின்ற அவருடைய வல்லமையின் சக்தியினால் போராடிச் செயற்படுகின்றேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in