1
1பவுல், சீலா,#1:1 சீலா – கிரேக்க மொழியில் இவனது பெயர் சில்வானு என்றுள்ளது. தீமோத்தேயு ஆகிய நாங்கள்,
நம்முடைய பிதாவாகிய இறைவனுக்குள்ளும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கின்ற தெசலோனிக்கேயருடைய திருச்சபைக்கு எழுதுவதாவது:
2பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
3பிரியமானவர்களே, நாங்கள் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அவ்வாறு செய்வது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் அதிகமதிகமாக வளர்ச்சியடைகிறது. அத்துடன் நீங்கள் ஒருவர்மீது ஒருவர் காட்டுகின்ற உங்கள் அனைவரது அன்பும் பெருகுகிறது. 4ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துன்புறுத்தல்கள், வேதனைகள் ஆகியவற்றின் மத்தியிலும் உங்களுடைய மனவுறுதியையும் விசுவாசத்தையும் குறித்து இறைவனுடைய திருச்சபைகளில் நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.
5இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு இவையெல்லாம் அத்தாட்சியாய் இருக்கின்றன. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய இராச்சியத்துக்கு தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள். அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள். 6இறைவன் நீதியுள்ளவர், உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகின்றவர்களுக்கு அவர் துன்பத்தைக் கொடுப்பார். 7துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். ஆண்டவர் இயேசு, பற்றியெரியும் நெருப்புடன் தமது வல்லமையுள்ள இறைதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது இது நிகழும். 8அப்போது, இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய ஆண்டவர் இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் தண்டிப்பார். 9அவர்கள் நித்திய பேரழிவைத் தண்டனையாகப் பெற்று, கர்த்தரின் பிரசன்னத்திலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் அப்புறப்படுத்தப்படுவார்கள். 10அவர் தம்முடைய பரிசுத்த மக்களில் மகிமைப்படும்படி வருவார். அந்நாளில், கர்த்தரை விசுவாசித்த அனைவரது மத்தியிலும் அவர் வியப்புடன் அதிசயமாய் பார்க்கப்படுவார். நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை நீங்கள் விசுவாசித்ததால், நீங்களும் அதில் பங்குகொள்வீர்கள்.
11இதை மனதில் கொண்டவர்களாக, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும் என உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து மன்றாடி வருகின்றோம். அத்துடன் உங்களுடைய அனைத்து நல்ல நோக்கங்களையும், உங்களுடைய விசுவாசத்தினால் உண்டாகின்ற உங்களது அனைத்து செயலையும் இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஜெபம்செய்து வருகின்றோம். 12அவ்விதம் நிறைவாகுவதால், நமது இறைவனதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினதும் கிருபையினாலே நம்முடைய ஆண்டவர் இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்பட வேண்டும் என்றும், நீங்கள் அவரில் மகிமைப்பட வேண்டும் என்றும் நாங்கள் மன்றாடுகிறோம்.