YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 1

1
எலியாவும் அகசியா அரசனும்
1ஆகாப் அரசன் மரணமடைந்த பின்பு மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். 2அந்நாட்களில் இஸ்ரயேலின் அரசனான அகசியா சமாரியாவிலுள்ள அவனுடைய மேல்மாடியின் யன்னலின் வழியாய் கீழே விழுந்து நோயுற்றிருந்தான். எனவே அவன் தூதுவர்களை சிலரை அனுப்பி, “எக்ரோனின்#1:2 எக்ரோனின் – பெலிஸ்திய நகரம் தெய்வமாகிய பாகால்-சேபூபிடம் போய், நான் இந்த வியாதியிலிருந்து குணமாவேனா? என்று விசாரியுங்கள்” என்று கேட்டுக்கொண்டான்.
3ஆனால் கர்த்தரின் தூதன் திஸ்பிய பட்டணத்தைச் சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவர் களைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால்-சேபூபிடம் விசாரிக்கப் போகின்றீர்கள்?’ என்று கேள். 4அதனால் கர்த்தர் சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு இறங்க மாட்டாய். நீ நிச்சயமாய் மரணிப்பாய்’ என்று சொல்” என்றான். அவ்வாறே எலியா போனான்.
5தூதுவர்கள் அரசனிடம் திரும்பி வந்தபோது, அரசன் அவர்களிடம், “நீங்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப் போய், “கர்த்தர் சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால்-சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகின்றாய்? எனவே நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு இறங்க மாட்டாய். நிச்சயமாகவே நீ மரணிப்பாய்” என்று சொல்லுங்கள்’ என்றான்” என்று சொன்னார்கள்.
7அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய அந்த மனிதன் எவ்வாறிருந்தான்?” என்று கேட்டான்.
8“அவன் கம்பளி உடை அணிந்து, இடுப்பைச் சுற்றித் தோல் பட்டியைக் கட்டியிருந்தான்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
அதற்கு அரசன், “அவன் திஸ்பிய பட்டணத்தைச் சேர்ந்த எலியாதான்” என்றான்.
9அதன் பின்னர் அரசன் ஐம்பது படைவீரர்களுக்குத் தளபதியை அவனது ஐம்பது பேருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகின்றார்” என்றான்.
10எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது படைவீரர்களையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அவ்வாறே வானத்திலிருந்து நெருப்பு வந்து தளபதியையும் அவனது படைவீரர்களையும் சுட்டெரித்தது.
11அப்போது அரசன் மற்றொரு ஐம்பது படைவீரர்களுக்குத் தளபதியை அவனுடைய ஐம்பது பேருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி அவனிடம், “இறைவனுடைய மனிதனே, ‘உடனே கீழே வா’ என்று அரசன் கட்டளையிடுகின்றார்” என்றான்.
12எலியா அதற்குப் பதிலளித்து, “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது படைவீரர்களையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அவ்வாறே வானத்திலிருந்து இறைவனுடைய நெருப்பு வந்து அவனையும் அவனுடைய ஐம்பது படைவீரர்களையும் சுட்டெரித்தது.
13அரசன் திரும்பவும் மூன்றாவது ஐம்பது படைவீரர்களுக்குத் தளபதியை அவனுடைய ஐம்பது பேருடன் எலியாவிடம் அனுப்பினான். இந்த மூன்றாவது தளபதி மேலே ஏறிப் போய் எலியாவின் முன்பாக முழந்தாளிட்டு, “இறைவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும் உமது பணியாட்களான இந்த ஐம்பது படைவீரர்களுடைய உயிரும் உம்முடைய பார்வையில் அருமையானதாக இருப்பதாக 14இதோ பாரும், வானத்திலிருந்து நெருப்பு வந்து முன்னைய இரு தளபதிகளையும், அவர்களுடைய படைவீரர்களையும் சுட்டெரித்தது. ஆனால் இப்போதோ என்னுடைய உயிரோ உம்முடைய பார்வையில் அருமையானதாய் இருப்பதாக” என்று கெஞ்சிக் கேட்டான்.
15அப்போது எலியாவிடம் கர்த்தரின் தூதன், “அவனோடே கீழே இறங்கிப் போ. அவனைக் குறித்துப் பயப்படாதே” என்றான். எனவே எலியா எழுந்து அவனுடனே கீழே இறங்கி அரசனிடம் சென்றான்.
16அவன் அரசனிடம், “கர்த்தர் சொல்வது இதுவே: ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால்-சேபூபிடம் விசாரிப்பதற்கு தூதுவர்களை அனுப்பினாய்? நீ இதைச் செய்தபடியினால், நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு இறங்கவே மாட்டாய். நீ நிச்சயமாய் மரணிப்பாய்’ ” என்றான். 17எலியா கூறிய கர்த்தருடைய வார்த்தையின்படியே அகசியா மரணமடைந்தான்.
அகசியாவுக்கு மகன் இல்லாதிருந்தபடியினால் அவனது சகோதரன் யோராம் அவனுக்குப் பின்னர் அரசனானான். யூதா அரசன் யோசபாத்தின் மகனான யெகோராம் யூதாவை அரசாண்ட இரண்டாம் வருடத்திலே யோராம் இஸ்ரயேலின் அரசனானான். 18அகசியா அரசனின் ஆட்சியின் மற்றைய நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in