1
1பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய மாகாணங்களில் சிதறுண்டு போய், இந்த உலகில் அந்நியர்களாக வாழ்பவர்களாக, 2ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால், இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்திருக்கவும் அவருடைய இரத்தம் தெளிக்கப்படவும்#1:2 இரத்தம் தெளிக்கப்படவும் – இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதல் என்பது இதன் பொருள். பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படி தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, எழுதுவதாவது:
கிருபையும், சமாதானமும் உங்களிடம் பெருகுவதாக!
உயிருள்ள நம்பிக்கைக்காக இறைவனுக்குத் துதி
3இறைவனும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவுமானவருக்குத் துதி உண்டாவதாக! அவர் தமது மகா இரக்கத்தின்படியே, இறந்தோரிலிருந்து ஏற்பட்ட இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாக உயிருள்ள ஒரு நம்பிக்கைக்காக நம்மை மறுபடியும் பிறக்கச் செய்திருக்கின்றார். 4உங்களுக்கென பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள உரிமைச் சொத்துக்காக, நம்மை அவ்வாறு மறுபடியும் பிறக்கச் செய்தார். அந்த உரிமைச் சொத்தானது ஒருபோதும் அழியாதது, கறைபடாதது, மங்காத பிரகாசமுடையது. 5நீங்களோ, கடைசி காலத்தில் வெளிப்படுத்தப்படுவதற்கென ஆயத்தமாயிருக்கின்ற அந்த இரட்சிப்பு வரும்வரை விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். 6இப்போது, சிறிது காலத்துக்கு பலவித சோதனைகளின் பொருட்டு நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், இதில் நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். 7நெருப்பினால் புடமிடப்பட்டும், தங்கம்கூட அழிந்தே போகின்றது. ஆனால் அதைவிட அதிக பெறுமதி வாய்ந்த உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, அதன் உண்மைத்துவம் நிரூபிக்கப்படுவதற்காகவே இந்தத் துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. அவ்விதம் நிரூபிக்கப்படுவதனால் இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, துதியும் மகிமையும் மாண்பும் உண்டாகும். 8நீங்கள் இயேசு கிறிஸ்துவை#1:8 இயேசு கிறிஸ்துவை – சில மொழிபெயர்ப்புகளில் அவரை என்றுள்ளது. கண்டதில்லை, ஆனாலும் அவர்மீது அன்பாயிருக்கின்றீர்கள். நீங்கள் இப்போது அவரைக் காணாதிருந்தும் அவரை விசுவாசித்தவர்களாய், வார்த்தைகளினால் விபரிக்க முடியாததும் மகிமையானதுமான மகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றீர்கள். 9இவ்வாறு நீங்கள் உங்களுடைய விசுவாசத்தின் குறிக்கோளாகிய உங்களது ஆத்துமாவின் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கின்றீர்கள்.
10உங்களுக்கு வரவிருந்த இந்தக் கிருபையைப் பற்றிச் சொன்ன இறைவாக்கினர்கள், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தார்கள். 11தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்தும் அதைத் தொடர்ந்து வரப்போகின்ற மகிமையைக் குறித்தும் முன்னறிவித்தபோது, கிறிஸ்துவின் ஆவியானவர் சுட்டிக்காட்டிய காலம் எதுவென்றும், காலச்சூழல்#1:11 காலச்சூழல் அல்லது நபரையும் என்னவென்றும் ஆராய்ந்தறிய அவர்கள் முயன்றார்கள். 12பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்களால் உங்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டதை, இறைவாக்கினர்கள் அப்பொழுதே பேசியிருந்தார்கள். அவற்றைக் கூறும்போது, அவர்கள் தங்களுக்கு அன்றி உங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இவற்றைக் கூர்ந்து பார்ப்பதற்கு இறைதூதர்களும் பேராவலாய் இருக்கின்றார்கள்.
பரிசுத்தராயிருங்கள்
13ஆகையால் உங்களுடைய மனங்களை, செயல்படுவதற்காக முழுமையாக ஆயத்தப்படுத்தி, சுயகட்டுப்பாட்டுடன் இருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்படும்போது உங்களுக்குத் தரப்படவிருக்கும் கிருபையின்மீது உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள். 14கீழ்ப்படிகின்ற பிள்ளைகளாய் இருந்து, முன்னர் நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாதிருங்கள். 15மாறாக, உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பதைப் போலவே, நீங்களும் உங்கள் அனைத்து நடத்தையிலும் பரிசுத்தமாக இருங்கள். 16ஏனெனில், “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்”#1:16 லேவி. 11:44,45; 19:2 என்று எழுதியிருக்கின்றதே.
17ஒவ்வொருவருடைய செயலின்படி பக்கச்சார்பு இன்றி நியாயம் தீர்க்கின்றவரை நீங்கள் பிதா என்று அழைத்து ஆராதிப்பதனால், நீங்கள் நாடுகடத்தப்பட்டவர்களாக வாழும் இக்காலத்தில் பயபக்தியுடன் வாழுங்கள். 18ஏனெனில், உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்குக் கையளிக்கப்பட்ட வீணான வாழ்க்கை முறையிலிருந்து, வெள்ளி அல்லது தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை, 19மாறாக களங்கமோ, குறைபாடோ இல்லாத செம்மறியாட்டுக் குட்டியின் இரத்தத்தைப் போன்றதும், உயர்மதிப்புடையதுமான கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். 20உலகம் படைக்கப்பட முன்பாகவே அவர் முன்னறியப்பட்டாலும், உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் பகிரங்கமாக்கப்பட்டார். 21அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கின்றீர்கள். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் இறைவனில் இருக்கும்படியாக, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
22உண்மையான சகோதர அன்புக்காக, சத்தியத்துக்குக் கீழ்ப்படிவதனூடாக நீங்கள் உங்கள் ஆத்துமாவை தூய்மைப்படுத்தி உள்ளீர்கள்; ஆகவே ஒருவர்மீது ஒருவர் தூய்மையான இருதயத்துடன் ஆழ்ந்த அன்பு செய்யுங்கள். 23ஏனெனில், நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கின்றீர்கள். அழிந்து போகின்ற விதையினால் அல்ல, அழியாததும் உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமாகிய இறைவனுடைய வார்த்தையினாலேயே அவ்வாறு மறுபடியும் பிறந்திருக்கின்றீர்கள். 24ஏனெனில்,
“மனிதர்கள் புல்லைப் போல உள்ளனர்,
அவர்களது மகிமை அனைத்தும், புல்லின் பூவைப் போல இருக்கின்றன;
புல் உலர்ந்தது, புல்லின் பூவும் உதிர்ந்தது,
25ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கின்றது.”#1:25 ஏசா. 40:6-8
இந்த வார்த்தையே உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டது.