YouVersion Logo
Search Icon

உன்னதப்பாட்டு 4

4
4 அதிகாரம்
1நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
2உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
3உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
4உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
5உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
6பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.
7என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
8லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.
10உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
11என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
12என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
13உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.
15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
16வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy