YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 20:2-22

எண்ணாகமம் 20:2-22 TAOVBSI

ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது. பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான். அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப் போனார்கள். இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

Video for எண்ணாகமம் 20:2-22

Free Reading Plans and Devotionals related to எண்ணாகமம் 20:2-22