YouVersion Logo
Search Icon

மாற்கு 14:1-26

மாற்கு 14:1-26 TAOVBSI

இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான். அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy