YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 49

49
49 அதிகாரம்
1யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
2யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
3ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
5சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
6என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
7உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.
8யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
9யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
10சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
12அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
13செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.
14இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
15அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
16தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.
21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
22யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
23வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
25உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
26உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
27பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.
28இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
29பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;
30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறை பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
32அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
33யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy