YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 36

36
36 அதிகாரம்
1மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
2 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,
3நீ தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
4இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும், வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப்போனபடியினால்.
5 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
6ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்.
7ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.
8இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளைவிட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள்.
9இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
10நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.
11உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
12நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.
13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
14நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
16பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.
18ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,
19அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்,
20அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
21ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்தநாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன்.
22ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தம் அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.
23புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
24நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
28உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,
29உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி,
30நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.
31அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.
32நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.
33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.
34பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.
35பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
36 கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.
37 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
38பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy