YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 25

25
25 அதிகாரம்
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
3நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
4இளநீலநூலும், இரத்தாம்பர நூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு மயிரும்,
5சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
6விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
7ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
8அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
9நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
10சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
11அதை எங்கும் பசும்பொன் தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
12அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
13சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
14அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.
15அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
16நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப்பெட்டியிலே வைப்பாயாக.
17பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப்பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
18பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
19ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்ற கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
20அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
21கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
22அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
23சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.
24அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
25சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,
26அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
27அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
28அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
29அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
30மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
31பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
32ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
33ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
34விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
35அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
36அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
37அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
38அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
39அதையும், அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
40மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy