YouVersion Logo
Search Icon

2 சாமுவேல் 5

5
5 அதிகாரம்
1அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
2சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
3இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
4தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
5அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
6தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
7ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
8எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
9அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
10தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
11தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
12 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,
13அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
14எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
15இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
16எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.
17தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.
18பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
19பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
20தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
21அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
22பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
23தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
24முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
25 கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy