YouVersion Logo
Search Icon

2 சாமுவேல் 20

20
20 அதிகாரம்
1அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
2அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் மட்டுமுள்ள யூதா மனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
3தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.
4பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.
5அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.
6அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
7அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.
8அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.
9அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
10தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
11யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்.
12அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்து நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையிலே வருகிறவர்கள் எல்லாரும் தரித்து நிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.
13அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.
14அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
15அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.
16அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள்.
17அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
18அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
19இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
20யோவாப் பிரதியுத்தரமாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.
21காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனை மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
22அவள் ஜனங்களிடத்தில் போய் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்திலே போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான்.
23யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
24அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
25சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
26யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy