மத்தேயு 5
TCVIN

மத்தேயு 5

5
மலைப்பிரசங்கம்
1இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள். 2இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
ஆசீர்வதிக்கப்பட்டோர்
அவர் சொன்னதாவது:
3“ஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
பரலோக அரசு அவர்களுக்கு உரியது.
4துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
5சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் பூமியை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
6நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் நிறைவு பெறுவார்கள்.
7இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் இறைவனைக் காண்பார்கள்.
9சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.
10நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.
11“என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராய்ப் பலவிதமான பொய்களைச் சொல்லித் தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். 12மகிழ்ந்து களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும்; ஏனெனில் இதைப்போலவே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
உப்பும் ஒளியும்
13“நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாய் இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாது. வெளியே வீசப்பட்டு, மனிதரால் மிதிக்கப்படும்.
14“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. 15மக்கள் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே. அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள். அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். 16அது போன்றே, உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கட்டும். அப்பொழுது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள்.
மோசேயின் சட்டம் நிறைவேறுதல்
17“நான் மோசேயின் சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்கவேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தேன். 18நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வானமும் பூமியும் மறைந்து போனாலும், மோசேயின் சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச்சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறிய புள்ளியோ மறைந்து போகாது. 19இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்கு போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளைத் தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் போதிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான். 20நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுடைய நீதி பரிசேயர், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் ஆகியோரின் நீதியை விட மேலானதாய் இருக்கவேண்டும்; இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசுக்குள் செல்லமாட்டீர்கள்.
கொலை
21“கொலை செய்யாதே, கொலை செய்கிறவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான்#5:21 யாத். 20:13 என்று வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘முட்டாள்,’ என்று சொல்கிறவன் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒருவனைச் சபிக்கிறவனோ, நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறான்.
23“அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், 24பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகு; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள்.
25“உங்களது பகைவர் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, வழியிலேயே அவனோடு விரைவாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் போடப்படலாம். 26உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்லுகிறேன்.
விபசாரத்தைப் பற்றிய போதனை
27“விபசாரம் செய்யாதே#5:27 யாத். 20:14 எனச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே போதும், அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான். 29உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. 30உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.
விவாகரத்து
31“தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும்#5:31 உபா. 24:1 என்று சொல்லப்பட்டிருக்கிறது. 32ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான்.
ஆணையிடுவது
33“மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள்#5:33 எண். 30:2 என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’ 34ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம். பரலோகத்தின் மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை; 35பூமியின் மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக் கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம். 36உனது தலையில் அடித்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உன்னால் ஒரு தலைமுடியையாகிலும் வெள்ளையாக்கவோ, கருப்பாக்கவோ முடியாதே. 37ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.
பழிவாங்குதல்
38“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்#5:38 யாத். 21:24; லேவி. 24:20; உபா. 19:21; என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 40யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவருக்கு, உங்கள்மேல் ஆடையையும் கொடுத்துவிடுங்கள். 41யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள். 42உன்னிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உன்னிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம்.
பகைவரிடத்தில் அன்புக்காட்டுவது
43“உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள்#5:43 லேவி. 19:18 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.#5:44 சில பிரதிகளில், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றும் இருக்கிறது 45இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவிற்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்கள் மேலும், நல்லவர்கள் மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்கள் மேலும், நீதியற்றவர்கள் மேலும் மழையை அனுப்புகிறார். 46உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி வசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்வதில்லையா? 47நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன? இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையா? 48உங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள்.

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு™

பதிப்புரிமை © 2005, 2020 Biblica, Inc.

பஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Indian Tamil Contemporary Version™, New Testament

Copyright © 2005, 2020 by Biblica, Inc.

Used with permission. All rights reserved worldwide.


Learn More About இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2020

Encouraging and challenging you to seek intimacy with God every day.


YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy.