YouVersion Logo
Search Icon

ரோமர் 9

9
இஸ்ரயேலைப் பற்றிய பவுலின் துக்கம்
1நான் கிறிஸ்துவுக்குள் உண்மையையே சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை; என்னுடைய மனசாட்சியும் பரிசுத்த ஆவியானவரால் இதை உறுதிப்படுத்துகிறது. 2என்னுடைய இருதயத்தில் பெரிதான துக்கமும், ஓயாத துயரமும் இருக்கின்றன. 3ஏனெனில் எனது சொந்த மக்களாகிய என்னுடைய யூத சகோதர சகோதரிகள் மீட்படைவதற்காக, முடியுமானால் நானே சபிக்கப்படவும் கிறிஸ்துவிலிருந்து விலக்கப்படவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். 4அவர்கள்தான் இஸ்ரயேல் மக்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் என்ற உரிமை அவர்களுடையதே; இறைவனுடைய மகிமை, உடன்படிக்கைகள், மோசேயின் சட்டத்தைப் பெற்றுக்கொள்ளுதல், ஆலய வழிபாடுகள், வாக்குத்தத்தங்கள் யாவும் அவர்களுடையதே. 5முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென்.
இறைவனுடைய தெரிந்தெடுத்தல்
6இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல. 7அதேபோல் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அவனுடைய உண்மையான பிள்ளைகளும் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.#9:7 ஆதி. 21:12 8இதிலிருந்து மனித இயல்பின்படி பிறக்கின்ற பிள்ளைகள் இறைவனுடைய பிள்ளைகளல்ல என்பது தெரிகிறது. இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளே ஆபிரகாமுடைய சந்ததிகளாய் எண்ணப்படுகிறார்கள். 9ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்”#9:9 ஆதி. 18:10,14 என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது.
10இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள். 11ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்: 12அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்”#9:12 ஆதி. 25:23 என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது. 13அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது.#9:13 மல். 1:2,3
14ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை. 15ஏனெனில் இறைவன் மோசேயிடம்,
“நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ,
அவனுக்கு இரக்கம் காட்டுவேன்.
யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ,
அவர்மேல் அனுதாபங்கொள்வேன்”#9:15 யாத். 33:19
என்றார்.
16எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார். 17ஏனெனில் இறைவன் பார்வோனுக்கு, “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்”#9:17 யாத். 9:16 என்று சொன்னார் எனறு வேதவசனம் கூறுகிறது. 18எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனை அப்படியே விட்டுவிடுகிறார்.
19உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? யாரால் இறைவனுடைய திட்டத்தை எதிர்க்கமுடியும்?” என்று கேட்கலாம். 20அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுகிறதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?”#9:20 ஏசா. 29:16; 45:9 என்று கேட்கலாமா? 21ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா?
22அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்? 23இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார். 24இறைவன் யூதர்களிடமிருந்து மாத்திரமல்ல, யூதரல்லாதவர்களிடமிருந்தும் நம்மை அழைத்தார். 25இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே,
“நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்;
அன்பில்லாத ஒருத்தியை, ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்.”#9:25 ஓசி. 2:23
26மேலும்,
“ ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில்,
அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’#9:26 ஓசி. 1:10 என்று அழைக்கப்படுவார்கள்.
இது நிகழும் என்று இறைவன் சொல்லுகிறார்”
என்று எழுதப்பட்டுள்ளது.
27இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து,
“இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப்போல் இருக்கிறது.
ஆனால், மீதியாயிருக்கும் மக்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.
28ஏனெனில் கர்த்தர் பூமியின்மேல் விரைவாகவும்,
மனத்திடத்தோடும் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.”#9:28 ஏசா. 10:22,23 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
29ஏசாயா இன்னுமொரு இடத்தில் முன்னறிவித்திருக்கிறார்,
“எல்லாம் வல்ல கர்த்தர்
நமக்கு சந்ததிகளாக சிலரை விட்டுவைக்காதிருந்தால்,
நாம் சோதோமைப் போலாகியிருப்போம்,
நாங்கள் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.”#9:29 ஏசா. 1:9
இஸ்ரயேலின் அவிசுவாசம்
30அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். அது விசுவாசத்தின் மூலமாக வரும் நீதியே; 31ஆனால் இஸ்ரயேலரோ, நீதியின் சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சித்தும் நீதியைப் பெறவில்லை. 32அவர்கள் ஏன் அதைப் பெறவில்லை? அவர்கள் அதை விசுவாசத்தின்மூலமாய் அல்ல, தங்கள் செயல்களின் மூலம் கடைப்பிடிக்கவே முயற்சித்தார்கள். அப்படி அவர்கள், தடுக்கி விழப்பண்ணும் கல்லில் தடுக்கி விழுந்தார்கள். 33இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளபடியே நடந்தது:
“இதோ, நான் மனிதர்களை இடறச்செய்யும் கல்லையும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையையும்
சீயோனிலே வைக்கிறேன்;
ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும்
ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.”#9:33 ஏசா. 8:14; 28:16

Currently Selected:

ரோமர் 9: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in