YouVersion Logo
Search Icon

மாற்கு 2

2
இயேசு முடக்குவாதக்காரனைக் குணப்படுத்துதல்
1சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். 2எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார். 3அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். 4ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள். 5இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில், 7“இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
8உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? 9நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார். 10ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். 11பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். 12உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
இயேசு லேவியை அழைத்தல்
13மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார். 14பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
15இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள். 16பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
17இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி
18அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
19அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது. 20ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
21“யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.” 22யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
இயேசு ஓய்வுநாளின் கர்த்தர்
23ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள். 24பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
25இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 26அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
27பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது. 28அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.

Currently Selected:

மாற்கு 2: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy