லூக்கா 6:27-49
லூக்கா 6:27-49 TCV
“எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். “உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். “மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார். மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான். “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும். “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். “நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை. ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.”