YouVersion Logo
Search Icon

வெளி 22

22
அத்தியாயம் 22
ஜீவநதி
1பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். 2நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள். 3இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். 4அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 5அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். 6பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”.
இயேசு சீக்கிரமாக வருகிறார்
7 “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார். 8யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். 9அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். 10அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது. 11“அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது. 13நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். 14ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 15நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள். 16இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார். 17ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும். 18இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 20இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” 21நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Currently Selected:

வெளி 22: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy