YouVersion Logo
Search Icon

சங் 37

37
சங்கீதம் 37
தாவீதின் பாடல்.
1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,
பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
3யெகோவாவை நம்பி நன்மைசெய்;
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,
அவர்மேல் நம்பிக்கையாயிரு;
அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
6உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,
உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;
காரியசித்தியுள்ளவன் மேலும்
தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
8கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
10இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;
அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,
மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
13ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;
அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,
செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும்,
துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;
அவர்கள் வில்லுகள் முறியும்.
16அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;
அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,
பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,
யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல
புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
21துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;
அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
23நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;
யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25நான் இளைஞனாயிருந்தேன்,
முதிர்வயதுள்ளவனுமானேன்;
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
26அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,
அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;
அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;
அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;
துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,
அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்;
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்
அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,
அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன்,
அவன் காணப்படவில்லை.
37நீ உத்தமனை நோக்கி,
செம்மையானவனைப் பார்த்திரு;
அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
38அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
39நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,
அவர்களை விடுவிப்பார்;
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

Currently Selected:

சங் 37: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy