செப்பனியா 3:1-8

செப்பனியா 3:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும், அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு. அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள், அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் யெகோவாவை நம்புவதில்லை, அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை. அவளுடைய அதிகாரிகள் கெர்ச்சிக்கும் சிங்கங்கள். அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள். காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள். அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்; அவர்கள் துரோகிகள். அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி, சட்டத்தை மீறுகிறார்கள். இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம் செய்வதில்லை; அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார். அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார், ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்; அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள். நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்; அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன. நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி, அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன். அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன; ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை. எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து, “நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு, என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன். அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை. என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன். ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும், இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள். ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் எல்லா நாடுகளையும் அரசுகளையும் ஒன்றுகூட்டி, என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன். அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால் முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.

செப்பனியா 3:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கலகம் செய்கிறதும், கந்தையும், அழுக்குமாயிருக்கிற நகரத்திற்கு ஐயோ, அது சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது யெகோவாவை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்திற்குத் துரோகம்செய்தார்கள். அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது. தேசங்களை அழித்தேன்; அவர்கள் கோட்டைகள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனிதர்கள் குடியில்லாமல்போய் வெறுமையாயின. உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள். ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.

செப்பனியா 3:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமே. உனது ஜனங்கள் தேவனுக்கு எதிராகப் போரிட்டனர். உனது ஜனங்கள் மற்ற ஜனங்களை துன்புறுத்தினர். நீ பாவத்தினால் கறைபட்டிருந்தாய். உனது ஜனங்கள் என்னைக் கவனிக்கவில்லை. அவர்கள் என்னுடைய உபதேசங்களை கேட்பதில்லை. எருசலேம் கர்த்தரை நம்புவதில்லை. எருசலேம் அவளது தேவனிடம் செல்வதில்லை. எருசலேமின் தலைவர்கள் கெர்ச்சிக்கிற சிங்கங்களைப் போன்றவர்கள். அவளது நீதிபதிகள் பசித்த ஓநாய்களைப் போன்றவர்கள். அவை மாலையில் ஆடுகளைத் தாக்க வரும். காலையில் எதுவும் மீதியாவதில்லை. அவளது பொறுப்பற்ற தீர்க்கதரிசிகள் மேலும், மேலும் சேர்ப்பதற்காக எப்போதும் ரகசியத் திட்டங்களை வைத்திருப்பார்கள். அவளது ஆசாரியர்களெல்லாம் பரிசுத்தமானவற்றையெல்லாம் பரிசுத்தம் இல்லாததுபோன்று கருதுவார்கள். அவர்கள் தேவனுடைய உபதேசங்களுக்கு தீமைகளையே செய்துள்ளனர். ஆனால் தேவன் இன்னும் அந்நகரத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து நல்லவராகவே உள்ளார். தேவன் எந்த அநீதியையும் செய்யவில்லை. தேவன் தொடர்ந்து தன் ஜனங்களுக்கு உதவுகிறார். காலைதோறும் அவர் தமது ஜனங்கள் நல்ல முடிவுகள் எடுக்குமாறு உதவுகிறார் ஆனால். அந்தத் தீய ஜனங்கள் தாம் செய்யும் தீயச்செயல்களுக்கு அவமானம் அடைவதில்லை. தேவன் கூறுகிறார்: “நான் நாடுகள் முழுவதையும் அழித்திருக்கிறேன். நான் அவர்களது கோட்டைகளை அழித்தேன். நான் அவர்களது தெருக்களை அழித்தேன். அங்கு இனிமேல் எவரும் போகமாட்டார்கள். அவர்களின் நகரங்கள் எல்லாம் காலியாயின. இனி அங்கே எவரும் வாழமாட்டார்கள். நான் இவற்றை உன்னிடம் சொல்கிறேன். நீ இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எனக்கு அஞ்சி மரியாதை செலுத்த வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் உங்கள் வீடு அழிக்கப்படாது. நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் நான் திட்டமிட்டபடி உங்களைத் தண்டிக்கமாட்டேன்” ஆனால் அந்தத் தீய ஜனங்கள் ஏற்கெனவே செய்த தீயச்செயல்களை மேலும் செய்ய விரும்பினார்கள். கர்த்தர், “எனவே, காத்திருங்கள்! நான் வந்து நின்று தீர்ப்பளிக்கும்வரை காத்திருங்கள். நான் பல நாடுகளிலிருந்து ஜனங்களை அழைத்துவந்து உன்னைத் தண்டிப்பதற்கு அதிகாரம் உடையவர். நான் எனது கோபத்தை உனக்கு எதிராகக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நான் எவ்வளவு கோபம் கொண்டேன் என்பதைக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நாடு முழுவதும் அழிக்கப்படும்.

செப்பனியா 3:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள். அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான். ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின. உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள். ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.