சகரியா 3:1-4

சகரியா 3:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார். அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான். தூதன் அவனுக்கு முன்பாக நிற்கிறவர்களிடம், “இவனுடைய அழுக்கு உடைகளைக் களைந்து விடுங்கள்” என்றார். அவர் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றிவிட்டேன். விலை உயர்ந்த உடைகளை நான் உனக்கு உடுத்துவிப்பேன் என்றார்.”

சகரியா 3:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார்.

சகரியா 3:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு தலைமை ஆசாரியனாகிய யோசுவாவை எனக்கு தூதன் காட்டினான். யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்தான். சாத்தான், யோசுவாவைக் குற்றஞ்சாட்டும்படி அவன் வலது பக்கத்திலே இருந்தான். பிறகு கர்த்தருடைய தூதன், “சாத்தானே, கர்த்தர் உன்னை தொடர்ந்து குற்றஞ்சாட்டுவார். கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் நகரைக் காப்பாற்றினார். இது எரிகின்ற நெருப்பிலிருந்து கட்டையை உருவி எடுப்பது போன்றதாகும்” என்றான். யோசுவா தூதனுக்கு முன் நின்று கொண்டிருந்தான். யோசுவா ஒரு அழுக்கான ஆடையை அணிந்திருந்தான். பிறகு, அந்த தூதன் தன்னருகில் நின்றுக்கொண்டிருந்தவர்களை நோக்கி, “யோசுவாவின் அழுக்கு ஆடைகளை எடுத்துப் போடுங்கள்” என்றான். பிறகு தூதன் யோசுவாவிடம், “இப்பொழுது நான் உனது குற்றங்களை நீக்கியிருக்கிறேன், நான் உனக்கு புதிய ஆடையை தருகிறேன்” என்றான்.

சகரியா 3:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.