சகரியா 14:3-9

சகரியா 14:3-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப்போல் அந்த நாடுகளுக்கு விரோதமாக சண்டையிடுவார். அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும். நீங்களோ என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியாவின் நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப்போல ஓடிப்போவீர்கள். அப்பொழுது என் இறைவனாகிய யெகோவா வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள். அந்த நாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இராது. அந்த நாள் பகலுமின்றி, இரவுமின்றி ஒரு நிகரற்ற நாளாயிருக்கும். அது யெகோவாவினால் அறியப்பட்ட ஒரு நாள். ஆனால் மாலைப் பொழுதிலும் வெளிச்சம் திரும்பிவரும். அந்த நாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாயும். அதன் அரைப்பங்கு கிழக்கே சவக்கடலுக்கும், அரைப்பங்கு மேற்கே மத்திய தரைக்கடலுக்கும் ஓடும். குளிர் காலத்திலும், கோடைகாலத்திலும் இவ்வாறே இருக்கும். யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும்.

சகரியா 14:3-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும். ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும். அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

சகரியா 14:3-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க, நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள். அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே ராஜாவாக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே.

சகரியா 14:3-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிக்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.