சகரியா 1:1-6
சகரியா 1:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தரியு அரசனின் ஆட்சியில், இரண்டாம் வருடத்தின் எட்டாம் மாதத்தில், இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்தச் சகரியா இத்தோவின் மகனான பெரகியாவின் மகன். “யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் கடுங்கோபம் கொண்டிருந்தார். ஆதலால் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே; ‘என்னிடம் திரும்புங்கள்,’ அப்பொழுது நானும் உங்களிடத்தில் திரும்புவேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கவேண்டாம். முந்தைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என யெகோவா அறிவிக்கிறார். இப்பொழுது உங்கள் முற்பிதாக்கள் எங்கே? இறைவாக்கினர் எங்கே? அவர்கள் இறந்துபோனார்களே. ஆனால் என் அடியவர்களான இறைவாக்கினருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளின்படியும், என் ஒழுங்குவிதிகளின்படியுமே உங்கள் முற்பிதாக்களுக்கு நடந்தது. “அதன்பின் அவர்கள் மனந்திரும்பி, ‘சேனைகளின் யெகோவா எங்கள் வழிகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு எங்களுக்குச் செய்திருக்கிறார். தாம் தீர்மானித்தபடி நீதியாகவே நமக்குச் செய்தார் என்றார்கள்.’ ”
சகரியா 1:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் மகனாகிய சகரியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தை: யெகோவா உங்கள் முன்னோர்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். உங்கள் முன்னோர்களைப்போல் இருக்காதீர்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத செயல்களையும்விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடுக்காமலும் என்னைக் கவனிக்காமலும் போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உங்கள் முன்னோர்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? இல்லாமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர்களுக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் முன்னோர்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் செயல்களின்படியாகவும் சேனைகளின் யெகோவா எங்களுக்குச் செய்ய தீர்மானித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
சகரியா 1:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரிடமிருந்து பெரகியாவின் குமாரன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் குமாரன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் குமாரன்) இதுதான் அந்த செய்தி. கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார். நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், “என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார். கர்த்தர், “உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை. தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். உனது முற்பிதாக்கள் இறுதியில் தங்கள் பாடங்களைக் கற்றனர். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தான் எவற்றைச் செய்ய வேண்டும் எனச் சென்னாரோ அதைச் செய்தார். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்காகவும், நாங்கள் செய்த தீமைக்காகவும் அவர் எங்களைத் தண்டித்தார்’ என்றார்கள். எனவே அவர்கள் தேவனிடம் திரும்பி வந்தனர்” என்றார்.
சகரியா 1:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? இராமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து, சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.