உன்னதப்பாட்டு 8:1-14

உன்னதப்பாட்டு 8:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீர் என் தாயின் மார்பில் பால் குடித்த என் சகோதரனாய் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! உம்மை வெளியில் கண்டால் நான் உம்மை முத்தம் செய்திருப்பேன்; யாரும் என்னை இகழமாட்டார்கள். நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன், எனக்குக் கற்றுக்கொடுத்தவளிடம் கொண்டு வந்திருப்பேன். குடிப்பதற்கு வாசனையுள்ள திராட்சை இரசத்தையும் என் மாதுளம் பழச்சாற்றையும் நான் உமக்குக் குடிக்கத் தருவேன். அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. எருசலேமின் மங்கையரே, ஆணையிடுகிறேன்; காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். தன் காதலர்மேல் சாய்ந்துகொண்டு பாலைவனத்திலிருந்து வருகிற இவள் யார்? ஆப்பிள் மரத்தின் கீழே நான் உம்மை எழுப்பினேன்; அங்குதான் உமது தாய் உம்மைப் பெற்றெடுத்தாள், பிரசவ வேதனைப்பட்ட அவள், அங்குதான் உம்மைப் பெற்றெடுத்தாள். என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. பெருவெள்ளமும் காதலை அணைக்காது; ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது. காதலுக்குக் கைமாறாக, ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும், அது முற்றிலும் அவமதிக்கப்படும். எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. அவளைப் பெண்பார்க்க வரும்நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்? அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம். ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால், கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம். நான் ஒரு மதில்போல கன்னிகைதான், என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. அவர் என்னைப் பார்க்கும்போது அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன். பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு ஆயிரம் சேக்கல் வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது; சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும், அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும். தோழிகள் சூழ, தோட்டத்தில் வசிப்பவளே, உன் குரலை நான் கேட்கட்டும். என் அன்பரே, இங்கே வாரும், நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல், வெளிமானைப் போலவும் மரைக்குட்டியைப் போலவும் வாரும்.

உன்னதப்பாட்டு 8:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள். நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், அவருடைய வலதுகை என்னை அணைக்கும். எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள் தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? மணவாளி கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும். மணவாளியின் சகோதரன் நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, அவளுக்கு மார்பகங்கள் இல்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். மணவாளி நான் மதில்தான், என் மார்பகங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். மணவாளன் பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார். என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். தோட்டங்களில் குடியிருக்கிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.

உன்னதப்பாட்டு 8:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று இருந்தால் நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும். இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள். நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன். நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன். கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன். அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும். அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும். எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள். நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம். இந்த பெண் யார்? தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள். கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன். அங்கே உம்மை உமது தாய் பெற்றாள். அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள். என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும். உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும். நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது. நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது. அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன. பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது. ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது. ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது. ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால் ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா? எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை. ஒருவன் அவளை மணக்க வரும்போது எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்? அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம். அவள் ஒரு கதவாக இருந்தால் அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம். நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார். சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான். ஒவ்வொருவரும் 1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான். சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும். ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன். தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே, உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள் நானும் அதைக் கேட்கவிடு. என் நேசரே வேகமாக வாரும். மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும், மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.

உன்னதப்பாட்டு 8:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள். நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும். எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன். தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன். பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார். என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.