உன்னதப்பாட்டு 2:8-17

உன்னதப்பாட்டு 2:8-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! இதோ, என் காதலர் வந்துவிட்டார்! மலைகளைத் தாண்டியும், குன்றுகள்மேல் தாவியும் வருகிறார். என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார், ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார், கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார். என் காதலர் என்னோடு பேசி, “என் அன்பே, எழுந்திரு, என் அழகே, என்னோடு வா. இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது, காட்டுப்புறா கூவும் சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது. அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார். பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே, உன் முகத்தை எனக்குக் காட்டு, உனது குரலை நான் கேட்கட்டும்; உன் குரல் இனிமையானது, உன் முகம் அழகானது. நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் பூத்திருக்கின்றன, அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும் குள்ளநரிகளையும் நமக்காகப் பிடியுங்கள். என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். என் காதலரே, பொழுது விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள் திரும்பி வாரும், குன்றுகளில் உள்ள மானைப்போலவும், மரைக்குட்டியைப் போலவும் திரும்பி வாரும்.

உன்னதப்பாட்டு 2:8-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார். என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று சன்னல் வழியாகப் பார்த்து, தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். என் நேசர் என்னோடே பேசி: மணவாளன் என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா. இதோ, மழைக்காலம் சென்றது, மழைபெய்து ஓய்ந்தது. பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சைக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! நீ எழுந்து வா. கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார். திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே. மணவாளி என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

உன்னதப்பாட்டு 2:8-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். இங்கே அது வந்தது. மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது. என் நேசர் வெளிமான் அல்லது குட்டி மானைப் போன்றவர். அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும், ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம். என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம். பார், மழைக்காலம் போய்விட்டது. மழை வந்து போனது. பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன. இது பாடுவதற்குரிய காலம். கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன. அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன. திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார். எழுந்திரு என் அன்பே, அழகே, நாம் வெளியே போகலாம்.” “என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய். உன்னைப் பார்க்கவிடு, உன் குரலைக் கேட்கவிடு, உன் குரல் மிக இனிமையானது. நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார். திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும், குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள். நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன. என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள். பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும், நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார். என் அன்பரே திரும்பும், இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும், குட்டி மான்களைப் போலவும் இரும்.

உன்னதப்பாட்டு 2:8-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார். என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா. கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார். திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்