ரூத் 1:1-4
ரூத் 1:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேல் நாட்டில் நீதிபதிகள் ஆளுகை செய்த காலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த ஒரு மனிதன் தன் மனைவியுடனும், தன் இரண்டு மகன்களுடனும் கொஞ்சக்காலம் மோவாப் நாட்டில் வாழ்வதற்காக அங்கு போனான். அந்த மனிதனின் பெயர் எலிமெலேக்கு. அவன் மனைவி பெயர் நகோமி. அவனுடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பதாகும். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த எப்பிராத்தியராவர். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மோவாபிலே குடியேறினார்கள். அங்கே நகோமியின் கணவன், எலிமெலேக் இறந்தான், அப்பொழுது நகோமி தன் இரண்டு மகன்களுடனும் தனித்து விடப்பட்டாள். நகோமியின் மகன்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். ஒருவன் ஒர்பாள் என்பவளையும், மற்றவன் ரூத் என்பவளையும் திருமணம் செய்தனர். அங்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வாழ்ந்தனர்.
ரூத் 1:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான். அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன், மற்றொருவன் பெயர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள். இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
ரூத் 1:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு குமாரர்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான். அவனது மனைவியின் பெயர் நகோமி. அவனது இரண்டு குமாரர்களின் பெயர்களும் மக்லோன், கிலியோன் என்பவை ஆகும். இவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் எப்பிராத்தியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பமானது மலை நாடான மோவாபுக்கு சென்று அங்கேயே தங்கியது. பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு குமாரர்களும் மட்டுமே மீந்திருந்தார்கள். அவளது குமாரர்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர்.
ரூத் 1:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்து விட்டார்கள். நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்து வருஷம் வாசம்பண்ணினார்கள்.