ரோமர் 9:17-24 - Compare All Versions

ரோமர் 9:17-24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஏனெனில் இறைவன் பார்வோனுக்கு, “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்” என்று சொன்னார் எனறு வேதவசனம் கூறுகிறது. எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனை அப்படியே விட்டுவிடுகிறார். உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? யாரால் இறைவனுடைய திட்டத்தை எதிர்க்கமுடியும்?” என்று கேட்கலாம். அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுகிறதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா? ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா? அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்? இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார். இறைவன் யூதர்களிடமிருந்து மாத்திரமல்ல, யூதரல்லாதவர்களிடமிருந்தும் நம்மை அழைத்தார்.

பகிர்
ரோமர் 9 TCV

ரோமர் 9:17-24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.

ரோமர் 9:17-24 TAERV (பரிசுத்த பைபிள்)

“நான் உன்னை ராஜாவாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்” என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார். “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம். இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.

ரோமர் 9:17-24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.