ரோமர் 8:1-10

ரோமர் 8:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, இப்பொழுது கிறிஸ்து இயேசுவில் இருக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லவேயில்லை. ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. மோசேயின் சட்டம் நமது மாம்ச இயல்பின் காரணமாக பலவீனமடைந்ததினால், எந்த வேலையைச் செய்துமுடிக்க வல்லமையற்றுப் போயிற்றோ, அதை இறைவனே செய்து முடித்தார். எப்படியென்றால் பாவநிவாரண பலியாக இறைவன் தனது சொந்த மகனை ஒரு பாவ மனிதனின் சாயலில் அனுப்பி, பாவம் உள்ள மனிதனிலிருந்த பாவத்தின் ஆற்றலை இல்லாதொழித்தார். மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார். மாம்ச இயல்பின்படி வாழ்கிறவர்கள், தங்கள் மனங்களை அந்த இயல்பின் ஆசைகளிலேயே பதித்திருக்கிறார்கள்; ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய இயல்பின்படி வாழ்கிறவர்களோ, ஆவியானவர் விரும்பும் காரியங்களிலேயே தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள். மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனமோ மரணம். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய மனமோ வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை. அதற்கு அப்படி அடங்கி நடக்கவும் முடியாது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது. ஆனால் நீங்களோ, மாம்ச இயல்பின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருந்தால், நீங்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களே. யாராவது கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களாயிருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அல்ல. கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் நிமித்தம் மரித்திருந்தாலும், உங்கள் ஆவியோ, நீதியின் நிமித்தம் உயிர்பெற்றிருக்கிறது.

ரோமர் 8:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே. அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார். சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார். அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும். எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது. சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை. மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.

ரோமர் 8:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, இப்போது இயேசுகிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் தண்டனைக்குரியவர்களாகத் தீர்ப்பளிக்கப்படமாட்டார்கள். ஏன் நான் அவ்வாறு தீர்ப்பளிக்கப்படமாட்டேன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்துவிற்குள் உயிருள்ள ஆவியின் சட்டவிதி என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் சட்ட விதிகளிடமிருந்து விடுதலை செய்கிறது. சட்ட விதிக்கு சக்தி இல்லை. ஏனென்றால் அது மனித பெலவீனங்களால் வரையறுக்கப்பட்டது. சட்ட விதியால் செய்ய முடியாததை தேவன் செய்து முடிக்கிறார். தேவன் தன் சொந்தக் குமாரனையே பூமிக்குப் பாவமனித சாயலாக அனுப்பினார். அவரை பாவத்தைப் போக்கும் பலியாகவும் கருதினார். எனவே மனித வாழ்க்கை மூலம் பாவத்தை அழித்தார். தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம். மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்கு உரியவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆவியைப் பின்பற்றி நடக்கிறவர்கள் ஆவிக்குரியதை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஒருவனது சிந்தனையானது பாவத்தால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் சாவை அடைகிறான். ஒருவனது சிந்தையானது ஆவியால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் நல்வாழ்வையும், சமாதானத்தையும் அடைகிறான். எப்படியென்றால் மாம்ச எண்ணம் தேவனுக்கு எதிரான பகையாகின்றது. அவன் தேவனுடைய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். உண்மையில் அவனால் கீழ்ப்படியவும் முடியாமல் போகின்றது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது. தேவனுடைய ஆவி உங்களிடம் வாழ்ந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. உங்கள் பாவத்தால் சரீரமானது இறந்து போகும். ஆனால் கிறிஸ்து உங்களில் இருந்தால் ஆவி உங்களுக்கு நல் வாழ்வைக் கொடுக்கும். ஏனென்றால் கிறிஸ்து உங்களை தேவனோடு சரியாக்கினார்.

ரோமர் 8:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

ரோமர் 8:1-10

ரோமர் 8:1-10 TAOVBSIரோமர் 8:1-10 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்