ரோமர் 7:5-21

ரோமர் 7:5-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நாம் முந்தி நம்மைக் கட்டி வைத்திருந்த மோசேயின் சட்டத்திற்கு மரித்தபடியால், இப்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். ஆகவே எழுதப்பட்ட பழைய முறைமையின்படி அவைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு, ஆவியானவரின் புதிய வழியின்படியே நாம் இறைவனுக்கு ஊழியம் செய்கிறோம். அப்படியானால் என்ன சொல்லுவோம்? மோசேயின் சட்டம் பாவமுள்ளது என்று சொல்லலாமா? நிச்சயமாக அல்ல, மோசேயின் சட்டம் இல்லாதிருந்தால், பாவம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்காது. “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே” என்று மோசேயின் சட்டம் சொல்லியிருக்காவிட்டால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வது பாவம் என்றே நான் அறியாதிருந்திருப்பேன். ஆனால் கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, பாவம் எல்லா விதமான ஆசைகளையும் என்னில் தூண்டிவிட்டது. ஏனெனில் மோசேயின் சட்டம் இல்லாமல் பாவம் செத்ததாயிருக்கிறது. முன்பு நான் மோசேயின் சட்டம் இல்லாமல் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் கட்டளை வந்தபொழுது, பாவத்திற்கு உயிர்வந்தது. நானோ செத்தவனானேன். வாழ்வளிப்பதற்காகவே கொடுக்கப்பட்ட கட்டளை, உண்மையில் எனக்கு மரணத்தைக் கொண்டு வந்ததையே நான் கண்டேன். ஏனெனில் பாவம், கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, என்னை ஏமாற்றி, கட்டளையின் மூலமாக என்னை மரணத்திற்குட்படுத்தியது. எனவே மோசேயின் சட்டம் பரிசுத்தமானதே. கட்டளையும்கூட பரிசுத்தமானதாகவும், நியாயமானதாகவும், நல்லதாகவுமே இருக்கிறது. அப்படியானால் நன்மையான அந்த மோசேயின் சட்டமே எனக்கு மரணமாயிற்றோ? இல்லவே இல்லை. பாவத்தைப் பாவம் என எடுத்துக்காட்டுவதற்காக இருந்த, நன்மையான மோசேயின் சட்டத்தின் மூலமாகவே, பாவம் எனக்கு மரணத்தீர்ப்பை ஏற்படுத்தியது. எனவே கட்டளையின் மூலமாக பாவம் முழுமையாகவே பாவம் என வெளிப்படுத்துகிறது. மோசேயின் சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம்; நானோ மாம்ச இயல்புடையவன், பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன். நான் செய்கிறதையே என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். நான் செய்ய விரும்பாததையே செய்வேனாகில், மோசேயின் சட்டம் நல்லது என்று நான் என் உள்ளத்தில் ஒத்துக்கொள்கிறேன். எனவே, உண்மையில் நான் வெறுக்கிறதையே செய்கிறது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே இதைச் செய்கிறது. என்னில், அதாவது என் மாம்ச இயல்பில், உண்மையாக நன்மை எதுவுமே குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், நன்மைசெய்ய வேண்டுமென்ற ஆசை என்னில் இருந்துங்கூட, அதை என்னால் செய்துமுடிக்க இயலாதிருக்கிறதே. நான் செய்ய விரும்புகிற நன்மையை நான் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, நான் செய்யவிரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கிறேன். நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்தது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அதைச் செய்கிறது. நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன்.

ரோமர் 7:5-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே. பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே. முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன். பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது. எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது. மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன். எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே. எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை. எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.

ரோமர் 7:5-21 பரிசுத்த பைபிள் (TAERV)

முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம். சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். “பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள்” என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும். சகலவிதமான தவறான ஆசைகளையும் நான் விரும்புமாறு கட்டளையை உபயோகப்படுத்தும் ஒரு வழியை பாவம் கண்டுபிடித்தது. அக்கட்டளையின் மூலமாகவே பாவம் வந்து சேர்ந்தது. சட்டவிதி இல்லாவிட்டால் பாவத்துக்கு வல்லமை இல்லாமல் போகும். முன்பு சட்டங்கள் இல்லாதவனாய் இருந்தபோது நான் உயிர் உள்ளவனாய் இருந்தேன். சட்டவிதி வந்த பிறகு பாவம் உயிர் கொண்டது. பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது. பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது. சட்டவிதி தூய்மையானதுதான். கட்டளையும் கூட தூய்மையாகவும் சரியாகவும் நன்மையாகவும் இருக்கின்றன. அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது. சட்டவிதி ஆவிக்குரியது என நாம் அறிகிறோம். ஆனால் நான் அல்ல. ஒரு அடிமையின் மேல் ஆட்சி செலுத்துவதைப்போல பாவம் என்னை ஆளுகிறது. நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது. அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன்.

ரோமர் 7:5-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றபடி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே. முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று. மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.