ரோமர் 7:21-25 - Compare All Versions

ரோமர் 7:21-25 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன். என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் என் உடலின் உறுப்புக்களிலோ இன்னொரு சட்டம் இயங்குகிறதைக் காண்கிறேன். அது என் உள்ளத்தில் இயங்கும் சட்டத்திற்கு எதிராகப் போராடி ஈடுபட்டு, என் உடல் உறுப்புகளில் இயங்குகின்ற பாவத்திற்கு என்னை அடிமைப்படுத்துகிறது. நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கிற இறைவனுக்கு நன்றி! நானோ என் உள்ளத்திலே இறைவனுடைய சட்டத்துக்கு அடிமையாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய மாம்ச இயல்பிலோ பாவத்திற்கே அடிமையாயிருக்கிறேன்.

பகிர்
ரோமர் 7 TCV

ரோமர் 7:21-25 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன். உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன். ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

ரோமர் 7:21-25 TAERV (பரிசுத்த பைபிள்)

அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

ரோமர் 7:21-25 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.