ரோமர் 7:1-6
ரோமர் 7:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா? உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள். எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல. ஆகவே, பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கு மரித்தீர்கள். இப்பொழுது, நீங்கள் மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கே உரியவர்களானீர்கள் இதன்மூலம் நாம் இறைவனுக்குக் கனியை விளைவிக்கிறவர்களாய் இருக்கிறோம். நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நாம் முந்தி நம்மைக் கட்டி வைத்திருந்த மோசேயின் சட்டத்திற்கு மரித்தபடியால், இப்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். ஆகவே எழுதப்பட்ட பழைய முறைமையின்படி அவைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு, ஆவியானவரின் புதிய வழியின்படியே நாம் இறைவனுக்கு ஊழியம் செய்கிறோம்.
ரோமர் 7:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள். ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை. அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள். நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
ரோமர் 7:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது. சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம்.
ரோமர் 7:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.