ரோமர் 4:7-12
ரோமர் 4:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான். இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம். அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது. ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது. விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
ரோமர் 4:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான். இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே. அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே. மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும், விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
ரோமர் 4:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)
“எப்பொழுது அவர்களின் சட்டத்துக்கு மாறான செயல்கள் மன்னிக்கப்படுகிறதோ, எப்பொழுது அவர்களின் பாவங்கள் மூடப்படுகிறதோ, அப்பொழுது மக்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ, அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்கு மட்டும் வருவதில்லை. விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் வரும். ஆபிரகாமின் விசுவாசம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவனும் நீதிமான் ஆனான். எனவே, இது எவ்வாறு ஆயிற்று? ஆபிரகாமை விருத்தசேதனத்திற்கு முன்னரா, பின்னரா, தேவன் எப்பொழுது ஏற்றுக்கொண்டார்? முன்னர் தானே. தேவன் தன்னை ஏற்றுக்கொண்டார் என்று காட்டுவதற்காக ஆபிரகாம் பின்னர் விருத்தசேதனம் செய்துகொண்டான். விருத்தசேதனம் செய்வதற்கு முன்பாக, விசுவாசத்தின் மூலம் தேவனுடன் சரியாக இருந்தான் என்பதற்கு விருத்தசேதனம் ஒரு அடையாளமாக இருந்தது. எனவே ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யாத, ஆனால் விசுவாசிக்கிற அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். அந்த மக்கள் விசுவாசித்து தேவனுக்கு உகந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்கும் அவர் தந்தையாகக் கருதப்படுகிறார். இதில் அவர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டதால் மட்டும் ஆபிரகாம் தந்தையாகவில்லை. ஆபிரகாம் விருத்தசேதனம் செய்துகொள்ளுமுன் வைத்திருந்த விசுவாசத்தைப் போன்று அவர்களும் விசுவாசம் வைத்திருந்ததால் ஆபிரகாம் அவர்களது தந்தையானான்.
ரோமர் 4:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.