ரோமர் 4:13-25

ரோமர் 4:13-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது. ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை. ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார். “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான். “உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான். அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை. இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான். தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான். இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது. இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.

ரோமர் 4:13-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும். மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை. எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது. “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான். “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான். எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

ரோமர் 4:13-25 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியினருக்கும் முழு உலகமும் கிட்டும் என்ற தேவனுடைய வாக்குறுதி கிடைத்தது. ஆபிரகாம் சட்டவிதிகளைக் கடைப்பிடித்ததால் அவனுக்கு அவ்வாக்குறுதி கிடைக்கவில்லை. அவன் தனது விசுவாசத்தால் தேவனுக்கு முன் நீதிமானாக இருந்தபடியால் இது கிடைத்தது. சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே தேவனுடைய வாக்குறுதியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு விசுவாசத்தால், பயனில்லாமல் போகும். ஆபிரகாமுக்கு தேவனுடைய வாக்குறுதியும் பயனில்லாமல் போகும். ஏனென்றால் சட்டவிதியானது, அதைக் கடைப்பிடிக்காதவர்களிடம் தேவனுடைய கோபத்தையே உருவாக்கும். எனவே சட்டவிதி இல்லாவிட்டால் பின்னர் கீழ்ப்படியாமையும் இல்லாமல் போகும். எனவே மக்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசத்தின் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் இதுகொடையாகிறது. இது இலவசமான கொடையானால் இதனை ஆபிரகாமின் பிள்ளைகளாய் விளங்கும் அத்தனை பேரும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாக்குறுதி மோசேயின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கிறது. ஆபிரகாமைப் போன்று விசுவாசம் கொள்ளும் அனைவரும் அதனைப் பெறலாம். அதனால்தான் ஆபிரகாம் அனைவருக்கும் தந்தையாகிறான். “அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான். ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” என்று சொன்னபடி ஆயிற்று. அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும், மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான். எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.” இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது. நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். நமது பாவங்களுக்காக இயேசு மரணத்திற்கு ஒப்படைக்கப்பட்டார். நம்மை நீதிமான்களாக்க அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.

ரோமர் 4:13-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும். மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.