ரோமர் 3:25-28 - Compare All Versions

ரோமர் 3:25-28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார். இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார். ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம்.

பகிர்
ரோமர் 3 TCV

ரோமர் 3:25-28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே. எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம்.

ரோமர் 3:25-28 TAERV (பரிசுத்த பைபிள்)

விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார். எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை.

ரோமர் 3:25-28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.