ரோமர் 3:1-9

ரோமர் 3:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது? எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே. சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ? ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே. இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன். நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்? “என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம். அப்படியானால், “நன்மை வரும்படி தீமை செய்வோம்” என்று ஏன் சொல்லக்கூடாது? நாங்களும் அப்படிச் சொல்வதாகவே சிலரால் பொய்யாகத் தூற்றப்படுகிறோம். ஆகவே இப்படியானவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பது நியாயமானதே! எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம்.

ரோமர் 3:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா? அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்? “நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும். ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.

ரோமர் 3:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர். உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும். “நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான். “நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே.

ரோமர் 3:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.