ரோமர் 2:12-16

ரோமர் 2:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ரோமர் 2:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஏனெனில் மோசேயின் சட்டத்தைக் கேட்கிறவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள். உண்மையாகவே யூதரல்லாத மக்களிடம் யூத சட்டம் இல்லாதிருந்தாலும், சட்டம் இல்லாத அவர்கள் சட்டம் சொல்லுகிற காரியங்களை இயல்பாகவே செய்கிறபொழுது, அவர்களே தங்களுக்கான சட்டமாய் இருக்கிறார்கள். சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது. ஆகவே என்னுடைய நற்செய்தி அறிவிக்கிறபடியே இயேசுகிறிஸ்துவின் மூலமாக, இறைவன் மனிதர்களுடைய இரகசிய சிந்தனைகளைக்குறித்து நியாயந்தீர்க்கும் நாளில் இவ்விதமாக எல்லோருக்கும் தீர்ப்பளிப்பார்.

ரோமர் 2:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள். என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ரோமர் 2:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும். யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள். தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்