ரோமர் 14:6-9

ரோமர் 14:6-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒருநாளை சிறப்பான ஒன்றாக எண்ணுகிறவன், கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான். இறைச்சியைச் சாப்பிடுகிறவனும் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டுச் சாப்பிடுவதனால், அவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான்; அப்படியே சிலவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனும், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறதினால் கர்த்தருக்கென்றே அதைச் செய்கிறான். ஏனெனில் நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே வாழ்வதுமில்லை, நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே மரிப்பதுமில்லை. நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கிறோம்; நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்றே மரிக்கிறோம். எனவே நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கர்த்தருடையவர்கள். கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கிறவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கவேண்டுமென்கிற காரணத்திற்காகவே மரித்து, உயிருடன் எழுந்தார்.

ரோமர் 14:6-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான். நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார்.

ரோமர் 14:6-9 பரிசுத்த பைபிள் (TAERV)

மற்ற நாட்களை விட ஒரு நாளைச் சிறப்பாகக் கருதுகிறவன் கர்த்தருக்காக அவ்வாறு கருதுகிறான். எல்லா வகை உணவுகளையும் உண்பவனும் கர்த்தருக்காகவே உண்ணுகிறான். அந்த உணவுக்காக அவன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒருவன் சிலவகை உணவுகளை உண்ண மறுப்பதும் அதே கர்த்தருக்காகத்தான். அவனும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல. நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள். எனவேதான் கிறிஸ்து இறந்தார். பிறகு மீண்டும் வாழ்வதற்காக இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதனால் அவர் இறந்தவர்களுக்கும் வாழ்கிறவர்களுக்கும் கர்த்தர் ஆக முடியும்.

ரோமர் 14:6-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான். நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடைய வர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.