ரோமர் 14:13-20
ரோமர் 14:13-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக்கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ போடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசுவில் இருக்கிற ஒருவனாகிய நான், எந்த உணவும் தன்னிலேயே அசுத்தமானது அல்ல என்பதை திடமாய் நம்புகிறேன். ஆனால் யாராவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும். நீ சாப்பிடுகிற உணவின் காரணமாக உன் சகோதரன் மனத்தாங்கல் அடைந்தால், நீ அவனில் அன்பு காட்டுகிறவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ சாப்பிடும் உணவினால் எந்த சகோதரனுக்காக கிறிஸ்து மரித்தாரோ அந்த சகோதரனை நீ அழித்துப்போட வேண்டாம். நீங்கள் நன்மை என எண்ணுகிறதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில் இறைவனுடைய அரசு சாப்பிடுவதையும் குடிப்பதையும் பற்றியதுமான விஷயமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான சந்தோஷம் என்பவைகளைப் பற்றியதே. ஏனெனில் இவ்விதம் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் இறைவனுக்குப் பிரியமாய் இருப்பான். அவன் மனிதரால் நன்மதிப்பையும் பெறுவான். எனவே நாம் சமாதானத்தை நம் மத்தியில் கொண்டுவரும் காரியங்களிலும், ஒருவரையொருவர் பக்தியில் பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபட முயற்சிசெய்வோம். உணவுக்காக இறைவனுடைய வேலையை அழித்துப்போட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் சாப்பிடும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் சாப்பிடுவது தீயதுதான்.
ரோமர் 14:13-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும். ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள். தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான். எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும்.
ரோமர் 14:13-20 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். நான் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். எந்த உணவையும் உண்ணத் தகாதது என்று கூற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவராவது ஒரு உணவை உண்ணத்தகாதது என்று நம்பினால் அந்த உணவும் உண்ணமுடியாதபடி தீட்டுள்ளதாகும். நீ சாப்பிடும் ஒன்றின் பொருட்டு, உன் சகோதரனின் விசுவாசத்தைப் புண்படுத்தினால், நீ உண்மையிலேயே அன்பு வழியைப் பின்பற்றவில்லை என்பதே அதன் பொருள். தவறு என்று ஒருவன் கருதும் உணவை உண்டு ஒருவனது நம்பிக்கையை அழித்து விடாதே. கிறிஸ்து அவனுக்காகவும் தன் உயிரை கொடுத்தார். நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம். இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான். அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும்.
ரோமர் 14:13-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.