ரோமர் 14:1-5
ரோமர் 14:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விசுவாசத்தில் பலவீனமாயிருக்கிறவனை, அவனுடைய கருத்து வேறுபாடுகளைக்குறித்து அவனுடன் வாதாடாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருவனுடைய விசுவாசம், எல்லாவித உணவையும் சாப்பிட அவனை அனுமதிக்கிறது. ஆனால் விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கிற இன்னொருவனோ, மரக்கறி உணவை மட்டுமே சாப்பிடுகிறான். எனவே எல்லாவகை உணவையும் சாப்பிடுகிறவன் அவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனை இகழ்வாகப் பார்க்கக்கூடாது. அதுபோல் எல்லாவகை உணவையும் சாப்பிடாதவனோ எல்லாவகை உணவைச் சாப்பிடுகிறவனில் குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே. இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அதற்கு அவனுடைய சொந்த எஜமானரே பொறுப்பாளி. அவன் உறுதியாய் நிற்பான், ஏனெனில் கர்த்தர் அவனுக்கு உறுதியாய் நிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராக இருக்கிறார். ஒருவன் ஒருநாளைவிட, இன்னொரு குறிப்பிட்ட நாள் சிறந்தது என்று எண்ணுகிறான்; ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் இவற்றைக்குறித்து உறுதியாகத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
ரோமர் 14:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள். ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான். சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே. அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும்.
ரோமர் 14:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம். ஒருவன் தான் விரும்புகிற எந்த வகையான உணவையும் உண்ணலாம் என்று நம்புகிறான். பவவீனமான நம்பிக்கை உள்ளவனோ காய்கறிகளை மட்டும் உண்ணலாம் என்று நம்புகிறான். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் அற்பமானவர்களாக எண்ணாமல் இருக்க வேண்டும். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களும் மற்றவர்களைத் தவறாக நியாயம் தீர்க்காமல் இருக்கவேண்டும். தேவன் அவனையும் ஏற்றுக்கொண்டார். மற்றொருவனின் வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு சொல்லுகிற உரிமை உங்களுக்கு இல்லை. அவன் செய்கிற தவறையும், நல்லவற்றையும் தீர்ப்பு சொல்ல அவனது எஜமானன் இருக்கிறார். கர்த்தரின் ஊழியன் நிலை நிறுத்தப்படுவான். ஏனென்றால் கர்த்தர் அவனை நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார். ஒருவன் ஒரு நாளை மற்ற நாட்களைவிடச் சிறப்பாகக் கருதுகிறான். மற்றொருவன் எல்லா நாட்களையும் ஒன்றுபோல எண்ணுகிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் தம் நம்பிக்கைகளை உறுதியாக எண்ணிக்கொள்ளவேண்டும்.
ரோமர் 14:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.